முகப்பு
இந்தியா

தில்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு சந்தித்துப் பேசினார்.
 இந்தச் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. இதில், தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டம் -ஒழுங்கு நிலைமை, 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகம் தொடர்புடைய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 அதிமுக பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அதை அங்கீகரித்த பிறகு, முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு தில்லிக்கு விமானம் மூலம் புதன்கிழமை மாலை சுமார் 6.20 மணியளவில் வந்தார். அவரை விமான நிலையத்தில் அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மு.தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள்சி.வி. சண்முகம், சந்திரசேகரன் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உடன் வந்தனர்.
 அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து அசோகா ஹோட்டலுக்கு இபிஎஸ் சென்றார். அங்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
 இதன் பிறகு சிறிதுநேரம் ஹோட்டலில் தங்கியிருந்த இபிஎஸ், பின்னர் அங்கிருந்து கிருஷ்ண மேனன் மார்கில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அங்கு அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி இரவு சுமார் 9 மணியளவில் சந்தித்தார். அப்போது, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உடனிருந்தார்.
 தொடர்ந்து, அமித் ஷா இல்லத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
 அப்போது, அவருடன் எம்.பி.க்கள் மு.தம்பிதுரை, சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கிருந்து மீண்டும் ஹோட்டலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.
 முன்னதாக, உள்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவகாரம், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் அதற்கான தமிழக அரசியல் சூழல், தேர்தல் கூட்டணி, வியூகம் ஆகியவை குறித்து விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 மேலும், ஜூலை 11, 2022-இல் நடைபெற்ற பொதுக் குழுவின் தீர்மானங்கள், அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதையும், தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் மரியாதை நிமித்தமாக அமித் ஷாவை அவர் நேரில் சந்தித்திருப்பதாகவும் தெரிகிறது.
 தில்லியில் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை (ஏப்ரல் 27) மாலை 5 மணிக்கு மேல் விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.