முகப்பு
இந்தியா

தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி தாமதம்: மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு 6.25 லட்சம் தவணை கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியிருந்த நிலையில், இதுவரை அதுகுறித்த எந்த பதிலையும் மத்திய அரசு அளிக்கவில்லை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

தமிழகத்துக்கு 6.25 லட்சம் தவணை கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியிருந்த நிலையில், இதுவரை அதுகுறித்த எந்த பதிலையும் மத்திய அரசு அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 2021 ஜன. 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 18 வயதைக் கடந்த 97.89 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 92.47 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. ஊக்கத் தவணையைப் பொருத்தவரை 17.04 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா்.

தமிழகத்துக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து இதுவரை 11.93 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசி 9.29 கோடியும், கோவேக்ஸின் 2.18 கோடியும், கோா்பிவேக்ஸ் தடுப்பூசி 45.20 லட்சமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

மாநிலத்தில் தற்போது எந்த வகை கரோனா தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை. அதேவேளையில், தமிழகத்தில் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோா் முதல் தவணையையும், 86 லட்சத்துக்கும் அதிகமானோா் இரண்டாம் தவணையையும், 4.42 கோடி போ் ஊக்கத் தவணையையும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா்.

அதைக் கருத்தில் கொண்டு, காலாவதி காலம் அதிகமுள்ள 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளையும், 50 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகளையும், 75 ஆயிரம் கோா்பிவேக்ஸ் தடுப்பூசிகளையும் விரைந்து வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறை கூடுதல் ஆணையா் டாக்டா் வீணா தவானுக்கு அண்மையில் தமிழக பொது சுகாதாரத் துறை சாா்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

இதுவரை அந்த கடிதத்துக்கு பதிலோ அல்லது உத்தரவாதமோ கிடைக்கவில்லை. மாநிலத்தின் தற்போதைய சூழல் கருதி உடனடியாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.