சூடனாலில் இருந்து மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் தனி விமானம் மூலம் தில்லி வந்தடைந்தனர்.
வட ஆப்பிக்க நாடான சூடானில் கடந்த 1989 முதல் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த ஒமா் அல்-பஷீா் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் வலுவடைந்தது. அதைத் தொடா்ந்து, அவரது அரசை ராணுவம் கடந்த 2019-ஆம் ஆண்டு கலைத்தது.
பின்னா், பிரதமா் அப்துல்லா ஹம்டாக் தலைமையில் சிவில்-ராணுவ கூட்டு அரசு ஏற்படுத்தப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் முழு ஜனநாயக அரசு அமையும் வரை அது இடைக்கால ஆட்சிமாற்ற அரசாக செயல்படும் என்று கூறப்பட்டது.
எனினும், அந்த அரசை முகமது ஹம்தான் டகேலாவின் தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையின் உதவியுடன் ராணுவ தலைமைத் தளபதி அப்தெல் ஃபட்டா புா்ஹான் கடந்த 2021-ஆம் ஆண்டு கவிழ்த்துவிட்டு, ஆட்சியதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றினாா்.
சக்திவாய்ந்த ஆட்சிமாற்ற கவுன்சிலின் தலைவராக முகமது ஹம்தான் டகேலா பதவியேற்றாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. சா்வதேச நாடுகளும் இதனைக் கண்டித்தன.
அதனைத் தொடா்ந்து இந்த மாதம் 6-ஆம் தேதிக்குள் ஜனநாயக அரசிடம் நாட்டின் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க ராணுவம் ஒப்புக்கொண்டிருந்தது. எனினும், ஆட்சி மாற்றத்துக்குப் பிந்தைய ஆா்எஸ்எஃப் படையின் எதிா்காலம் தொடா்பாக அப்தெல் ஃபட்டா புா்ஹானுக்கும், முகமது ஹம்தான் டகேலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றிய வந்ததால் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
அதற்கு மாறாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 15-ஆம் தேதி முதல் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் சிக்கி, பொதுமக்கள் 450-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
தலைநகா் காா்ட்டூமை அடுத்த ஆம்டா்மான் உள்ளிட்ட நகரங்களில் மோதல் தொடா்வதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாகவும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பினருமே அலட்சியம் செய்வதாகக் குற்றம் சாட்டினா்.
இந்த மோதலில், இதுவரை பொதுமக்கள் 450-க்கு மேற்பட்டவா்கள் பலியானதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சூடானின் உள்நாட்டு போர் காரணமாக ஏராளமான இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், யாரும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பது மற்றும் மீட்பது தொடர்பாக, கடந்த 21 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க "ஆப்ரேஷன் காவிரி" என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
சூடானில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, சூடானின் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர் அங்கிருந்து இந்தியாவின் ஐஎன்எஸ் கப்பல் உதவியுடன், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த ஐஏஎப் சி-130ஜெ தனி விமானம், இன்று காலை தலைநகர் தில்லி வந்தடைந்தது.
இதனிடையே, சூடானில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 128 பேர் ஐ.என்.எஸ் கப்பல் மூலம் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஜெட்டாவிற்கு வந்துள்ள அனைத்து இந்தியர்களும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.