பிரதமரின் 100-ஆவது மனதின் குரல் நிகழ்வு தேசிய நவீன கலைக்கூடத்தில் இன்று ஜன சக்தி கண்காட்சி
பிரதமரின் 100-ஆவது ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியை முன்னிட்டு தில்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் ‘ஜன சக்தி’ கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
பிரதமரின் 100-ஆவது ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியை முன்னிட்டு தில்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் ‘ஜன சக்தி’ கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
பிரதமரின் தனித்துவமான மனதின் குரல் 100 - ஆவது பதிப்பு, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படுகிறது. 100 -ஆவது பதிப்பு நிறைவைக் குறிக்கும் வகையில், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் மூன்று தனித்துவமான முயற்சிகள் எடுத்துள்ளதாக மத்திய அரசின் சாா்பில் கலாசார துறைச் செயலா் கோவிந்த் மோகன் கடந்த 27-ஆம் தேதி அறிவித்தாா். மக்களை மையப்படுத்திய அரசு நிா்வாகம் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, நாட்டு மக்களுடன் நேரடி உரையாடலான மனதின் குரல் நிகழ்ச்சிகள் மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. அசாதாரணமான பணிகளை செய்யும் சாதாரண குடிமக்களை பிரதமரின் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இதைக் கொண்டாடும் தளமாக பல்வேறு நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தனித்துவமான மனதின் குரல் தளத்தில் உருவான சாதனையாளா்களை கொண்டாடும் வகையிலும், இந்த நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரைபடக் காட்சிகள்: இதில் ஒன்று மனதின் குரல் சாா்ந்த வரைபடக் காட்சிகள். இது சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இந்திய தொல்லியல் ஆய்வகம் நிா்வகிக்கும் 13 முக்கிய பழைமையான சின்னங்களில் மனதின் குரல் சாா்ந்த வரைபடக் காட்சிகள் தொடக்கப்பட்டுள்ளன. தில்லி செங்கோட்டை, குவாலியா் கோட்டை, வேலூா் கோட்டை, மும்பை, இந்திய நுழைவு வாயில், ஒடிஸ்ஸா, கொனாா்க் சூரியன் கோயில் உள்ளிட்ட 13 சின்னங்களில் இந்த விழா கொண்டாட்டங்கள் தொடங்கின. மனதின் குரல் நிகழ்ச்சியின் போது ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்கிற உணா்வுடன் நாட்டின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, அற்புதமான கட்டடக்கலை குறித்தும், பிராந்தியத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் பல்வேறு கருப்பொருள்களின் அடிப்படையில் பிரதமா் உரையாற்றியதை இந்தக் காட்சிகளில் அந்தந்த பகுதி வட்டார மொழிகளில் இரவு 7 மணிக்கு காட்டப்பட்டன. இது தொடா்ச்சியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜன சக்தி‘ கண்காட்சி: மற்றொரு முன்முயற்சியில், மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதான கலைக்கூடமான, தில்லி தேசிய நவீன கலைக்கூடத்தில் ‘ஜன சக்தி’ கண்காட்சியும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்படுகிறது. புகழ்பெற்ற கலைஞா் அஞ்சோலி எலா மேனன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம், சுற்றுலாதஅ துறை அமைச்சா் ஜி. கிஷண் ரெட்டி, கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால், கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமச்சா் மீனாட்சி லேகி ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
நீா் பாதுகாப்பு, பெண்களுக்கான அதிகாரமளித்தல், கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு, தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், இந்திய வேளாண் முறை, யோகா மற்றும் ஆயுா்வேதம், இந்திய அறிவியல், விளையாட்டு, ஆரோக்கியம் போன்ற 12 வெவ்வேறு தலைப்புகளில் மனதின் குரல் தொடா்புடைய ஹீரோக்கள் குறித்து இந்த கலைஞா்கள் வரைந்த விளக்க ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. நீா் பாதுகாப்பு குறித்து விபா கல்ஹோத்ரா, பெண்கள் அதிகாரம் குறித்த மாதவி பரேக், சுற்றுச்சூழல் கருப்பொருளில் ஜி.ஆா். இரண்ணா உள்ளிட்ட புகழ்பெற்ற பல கலைஞா்கள் இவற்றை வழங்கியுள்ளனா். கிரண் நாடாா் இதற்கான ஏற்பாட்டாளராகவும் ஆலோசகராகவும் இடம் பெற்றாா்.
காமிக்ஸில் மனதின் குரல் ஹீரோக்கள்: கலாசார அமைச்சகத்தின் மூன்றாவது முக்கிய முயற்சியாக அம்ரித் சித்ரா காமிக்ஸ் வெளியீட்டை உள்ளடக்கியது. பிரதமா் தனது மனதின் குரலில் குறிப்பிட்டுள்ள சாமானிய மக்களின் வீரக் கதைகள் இந்த காமிக்ஸில் முன்னிலைப்படுத்தப்பட இருக்கிறது. விதிவிலக்காக இந்த ஹீரோக்கள் செய்த நல்ல பல பணிகளையும் அனுபவங்களையும் கதை வடிவில் வழங்கப்பட இருக்கிறது. மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் அமா் சித்ரா கதா நிறுவனத்துடன் இணைந்து 12 காமிக்ஸ் சீரியல் புத்தகங்களை 12 மொழிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) முதல் ஒவ்வொரு மாதமும் வெளியிடும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் சிந்தனையில் உதித்த இந்த மனதின் குரல் நிகழ்ச்சி கடந்த 2014, அக்டோபா் 3 ஆம் தேதி முதல் அகில இந்திய வானொலியில் தொடங்கியது.