இந்தியா

ஓபிசி - ரோகிணி ஆணைய பரிந்துரை: மத்திய பாஜக அரசு என்ன செய்யப் போகிறது?

DIN

ஓபிசி இடஒதுக்கீடு தொடா்பாக அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம், குடியரசுத் தலைவரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் குழுவின் பரிந்துரைகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றுமா? இது வரும் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(ஓபிசி) பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களை உள்பிரிவுகளாக வகைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தகுதிகள், அளவீடுகள் குறித்த பரிந்துரைகளை அளிக்கும் வகையில் தில்லி உயா்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஜி. ரோகிணி தலைமையில் ஓபிசி ஆணையம் கடந்த 2017-இல் அமைக்கப்பட்டது. 2018 ஜனவரி 2 ஆம் தேதி அறிக்கை  சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 13 முறைகள் நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், ரோகிணி ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் செவ்வாய்க்கிழமை(ஆக.1) சமா்ப்பித்தது. 

ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே சமச்சீரற்ற முறையில் இடஓதுக்கீட்டின் பயன்கள் சென்றடைவது குறித்தும் ரோகிணி ஆணையம் ஆய்வு மேற்கொண்ட நிலையில் ஓபிசி பட்டியலில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு பலன்கள் சமமாக சென்றடைய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. 

நீதிபதி ரோகிணி

கடந்த 2018ல் செய்தியாளர்களிடம் பேசிய ரோகிணி ஆணையம், 2014 - 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் மத்தியப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு ஆகியவற்றில் 50 சதவீத இடஒதுக்கீட்டுப் பலன்களை ஒரு சதவீதத்திற்கும் குறைவான பிற்படுத்தப்பட்ட சாதியினரே எடுத்துக்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளது. 

ஓபிசி மத்திய பட்டியலில் 2,600 க்கும் மேற்பட்ட சமூகப் பிரிவுகள் உள்ளன. இதில், 938 ஓபிசி உட்பிரிவுகளுக்கு இடஒதுக்கீட்டில் அங்கீகரிக்கப்படவில்லை.  மேலும், 20 சதவீத சமூகங்கள் எந்தப் பலனையும் பெறவில்லை, 994 உட்பிரிவுகளும் வெறும் 2.68 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமே பெற்றுள்ளதாக ஆணையம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. ஆணையத்தின்படி, மொத்தமுள்ள 2,600 சமூகங்களில் குறைந்தது 5,000 பிரிவுகள் மற்றும் உட்பிரிவுகள் இருக்கலாம் என்றும் ஆணையம் கூறுகிறது. 

ரோகிணி குழுவின் பரிந்துரைகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு நிறைவேற்றுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலும் நடப்பாண்டு இறுதியில் பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும் சாதி அரசியல், பாஜகவுக்கு அரசியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இதில் அரசு மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படும் என்று கூறப்படுகிறது. 

ஒருபக்கம், ரோகிணி ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமெனில் முதலில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

2014 நாடாளுமன்றத் தேர்தல் முதல் தேர்தல் ஆதாயங்களுக்குப் பின்னால் மிகப்பெரிய சக்தியாக இருக்கும், செல்வாக்கு மிக்க ஓபிசி சமூகங்களுக்கு எதிராக செயல்பட முடியாது என்பதால் பாஜக அரசு இதனை ஆய்வு செய்து பின்னரே முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுக்கு கடந்த 2009 தேர்தலில் 20% ஆக இருந்த ஓபிசி வாக்கு சதவீதம் 2019 தேர்தலில் 44% ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT