தெலங்கானா ‘மக்கள் பாடகர்’ கத்தார் காலமானார்!
தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல மேடைப் பாடகரும் ‘கத்தார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவருமான ‘மக்கள் பாடகர்’ கும்மிடி விட்டல் ராவ்(74) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
ஹைதராபாத்: தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல மேடைப் பாடகரும் ‘கத்தார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவருமான ‘மக்கள் பாடகர்’ கும்மிடி விட்டல் ராவ்(74) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
1949 இல் ஹைதராபாத்தின் மேடக் மாவட்டத்தின் தூப்ரான் என்ற பகுதியில் பிறந்த கத்தாரின் இயற்பெயர் கும்மிடி விட்டல் ராவ். இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கத்தார் 1980-களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கட்சியின் கலாசாரப் பிரிவு சார்பில் நடந்த பல்வேறு கூட்டங்களில் புரட்சிகர பாடல்கள் பாடி மக்களின் கவனத்தை ஈர்த்தார். இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் பிரபலமானவர். 1997 இல் அவரது வீட்டில் நடந்த ஒரு படுகொலை முயற்சியின் போது ஒரு குண்டு அவரது முதுகுத்தண்டில் பதிந்து தப்பினார்.
2010 வரை நக்சல் இயக்கத்தில் செயல்பட்ட கத்தார், பின்னர் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க உருவாக்கப்பட்ட கதர் கட்சியின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது பெயரை கத்தார் என்று மாற்றிக்கொண்டார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் இயக்கங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, தெலுங்கு பேசும் மக்களிடையே அவருக்கு பெரும் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
தெலங்கானா தனி மாநிலத்திற்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வந்த கத்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கருத்தியல் ரீதியாகவும், மக்களின் பிரச்னைகளை தனது பாடல்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்ததால் ‘மக்கள் பாடகர்’ என்று அழைக்கப்பட்டார். அவர் 'மா பூமி' உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) கத்தார் காலமானார்.
கத்தார் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கம்மத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற தெலங்கானா காங்கிரஸ் கூட்டத்தில் கத்தார் கலந்து கொண்டு ராகுல் காந்தியை கட்டிப்பிடித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் அது தொடங்குவதற்கு முன்பே இறந்துவிட்டார்.