முகப்பு
இந்தியா

மோடி.. மோடி.. ராகுல்.. ராகுல் என அதிரும் மக்களவை

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி ஆற்றிய உரைக்குக் கண்டனம் தெரிவித்து மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:


மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆற்றிய உரைக்குக் கண்டனம் தெரிவித்து மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் காந்தி, மணிப்பூரை பிரதமர் மோடி பிளவுபடுத்திவிட்டார், மணிப்பூரை கைவிட்டுவிட்டார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். மத்திய அமைச்சர்களின் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கோஷம் எழுப்பினர். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மோடி .. மோடி என கோஷம் எழுப்ப, மறுபக்கம் ராகுல்.. ராகுல்.. என காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.

மக்களவையில், இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், 
கடந்த முறை அதானி பற்றி பேசியதால்தான் எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒற்றுமை நடைப்பயணத்திற்குப் பிறகு எனக்கு ஆணவம் அகன்றுவிட்டது. இன்று என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து நான் பேசப்போகிறேன். மணிப்பூர் பற்றிதான் நான் பேசப்போகிறேன் என்று குறிப்பிட்டார்.

அதானி குறித்த பேச்சு பாஜகவினரை எரிச்சலூட்டியிருக்கிறது. ஆனால், இன்று அதானி பற்றி பேசப்போவதில்லை. எனவே, எனது பாஜக நண்பர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முதலில் நான் அச்சப்பட்டேன். ஆனால், இந்த நடைப்பயணத்தின்போது பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இந்திய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை நடைப்பயணம் கொடுத்தது. குமரி முதல் இமயம் வரையிலான எனது ஒற்றுமை நடைப்பயணம் நிறைவுபெறவில்லை. மீண்டும் தொடங்கும் என்றார்.

பாஜக ஆட்சி நடக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நான் அவதூறுக்கும் சிறுமைப்படுத்துதலுக்கும் ஆளாகி வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் நான் சிறைக்குச் செல்லத் தயார் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்திய நாட்டின் ஒரு பகுதியாக மணிப்பூரை பிரதமர் மோடி கருதவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூரை இரண்டாக உடைத்துவிட்டார். இன்று வரை பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவில்லை. ஏனென்றால், இந்திய நாட்டின் ஒரு பகுதியாக அவர் மணிப்பூரைக் கருதவில்லை என்பதே. மணிப்பூரை கைவிட்டுவிட்டார். மணிப்பூருக்கு நானே சென்றேன். ஏன் பிரதமர் மோடி இன்னும் செல்லவில்லை என்றும் ராகுல் காந்தி பேசினார்.

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட பிரதமர் மோடி பேசவில்லை. இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள் என்று உணர்ச்சிப்பூர்வமாக ராகுல் காந்தி உரையாற்றினார்.

இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →