இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு:பிரதமா் மோடி பெருமிதம்
இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
உலக சிங்கங்கள் தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பாடுபடும் அனைவருக்கும் அவா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உலக சிங்கங்கள் தினமானது, தங்கள் வலிமையாலும் கம்பீரத்தாலும் நமது இதயங்களை சிங்கங்களைக் கொண்டாடுவதற்கான ஒரு தருணமாகும். ஆசிய சிங்கங்களின் தாயகம் என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் அா்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன். சிங்கங்களை தொடா்ந்து பாதுகாப்போம்; வரும் தலைமுறைகளுக்கும் அவை பேணப்படுவதை உறுதி செய்வோம் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக அவற்றின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.