கர்நாடகத்தின் மிகப்பெரிய மாவட்டம் விரைவில் பிரிப்பு
கர்நாடகத்தின் மிகப்பெரிய மாவட்டமான பெலகாவியை இரண்டாகப் பிரிக்கும் முக்கிய திட்டம் குறித்து அந்த மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
பெலகாவி: கர்நாடகத்தின் மிகப்பெரிய மாவட்டமான பெலகாவியை இரண்டாகப் பிரிக்கும் முக்கிய திட்டம் குறித்து அந்த மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் பரப்பளவிலும் மிகப்பெரியதான அதாவது 13,400 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மக்களவைத் தொகுதியின் பாதி பகுதியையும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டது பெலகாவி.
பொதுப் பணித் துறை அமைச்சரும், பெலகாவி மாவட்ட பொறுப்பாளருமான சதீஷ் ஜர்கிஹோலி கூறுகையில், பெலகாவி மாவட்டத்தை பிரிக்கும் திட்டம் பரிசீலக்கப்பட்டு வருகிறது. அதனை கோகக், சிக்கோடி, பெலகாவி என மூன்று மாவட்டங்களாகப் பிரிப்பது தொடர்பாக அண்மையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பரிந்துரை முன்வைக்கப்பட்டது. கர்நாடக அரசு இந்த பரிந்துரையை தீவிரமாக பரிசீலிக்கிறது.
பெலகாவி மாவட்டத்தை மூன்றாக பிரித்தால், மாவட்ட நிர்வாகம் மிக எளிதாக மக்களுக்கு பணிகளைக் கொண்டு சேர்க்க முடியும். மக்களும் நிர்வாகத்தை மிக எளிதாக அணுக முடியும். மேம்பாட்டு நிதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் உடனடியாக சென்றடையும்.
மாவட்ட தலைமையகத்தை அடைய பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது 100 முதல் 200 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியது உள்ளது. இந்த நிலை மாறும். எனவே, தற்போது பெலகாவியை இரண்டாக அல்லது மூன்றாக பிரிப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.