இந்தியா

ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதைக் காண மேலும் சில வழிகள்: முன்பதிவு இல்லை

ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்படுவதைப் பார்க்க ஸ்ரீஹரிகோட்டாவில் முன்பதிவும் செய்ய முடியாமல் ஆகிவிட்டதா? கவலை வேண்டாம்.. 

DIN

சந்திரயான்-3 விண்ணில் பாய்வதைப் பார்க்க முடியாமல் போய்விட்டதா? ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்படுவதைப் பார்க்க ஸ்ரீஹரிகோட்டாவில் முன்பதிவும் செய்ய முடியாமல் ஆகிவிட்டதா? கவலை வேண்டாம்.. 

ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதைப் பார்க்க சில வழிமுறைகள் இருக்கின்றன. இதற்கு எந்த முன்பதிவும் தேவையில்லை. எந்தக் கவலையும் இல்லை.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் வரும் சனிக்கிழமை (செப். 2) விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தில் இருந்து அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு ராக்கெட்டை செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதனை நேரில் பார்க்க விரும்பும் மக்களுக்காக இஸ்ரோ இணையதளத்தில் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டிருந்தது. ஒருவேளை, அதில் உங்களுக்கான முன்பதிவை செய்ய முடியாமல் போயிருந்தால், அப்பகுதிக்கு அருகே இருக்கும் மேலும் சில இடங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இங்குச் செல்ல எந்த முன்பதிவும் தேவையில்லை.

புலிகாட் பறவைகள் சரணாலயத்தில் அமைந்திருக்கும் பார்வை முனையத்திலிருந்தும் ஆதித்யா-எல்1 ஏவப்படுவதைப் பார்க்கலாம். காரணம், ஏவுதளத்தில் இருந்து வெறும் 4.7 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த பார்வை முனையம் அமைந்துள்ளது.

இங்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்பதால், இங்கிருந்து ஆதித்யா விண்கலம் ஏவுவதைப் பார்க்கச் செல்லும் போது உரிய அடையாள அட்டைகளைக் கையில் வைத்திருக்கவும். இதற்கு எந்த முன்பதிவும் தேவையில்லை. 

இதையும் விட, வேநாடு பகுதியில் இருந்து புலிகாட் பறவைகள் சரணாலயம் செல்வதற்கான சாலையின்  இணைப்புச் சாலை ஒன்று உள்ளது. இங்கிருந்து விண்கலம் ஏவப்படுவதை எளிதாகக் காணலாம். சொல்லப்போனால் மிகப்பெரிய யூடியூபர்கள், விண்வெளி ஆய்வுகளில் ஆர்வமிருப்பவர்கள் பலரும் இந்தச் சாலையில் இருந்துதான் நேரில் பார்க்கவும், விடியோ எடுக்கவும் அதிகம் விரும்புவார்கள்.

எனவே, இஸ்ரோ இணையதளத்தில் முன்பதிவு செய்ய முயன்று இடம் கிடைக்காதவர்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரி, இதெல்லாம் எங்களுக்கு செட்டே ஆகாது என்று சொல்பர்களா நீங்கள்? ஆனால் ஆதித்யா விண்கலம் விண்ணில் பாய்வதைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்பவர்களுக்கும் ஒரு வழி இருக்கிறது. 

இஸ்ரோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், நேரலையில் ஆதித்யா விண்ணில் ஏவுவதைக் காண வசதிகளை செய்திருக்கிறது. அதன் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே பார்த்து மகிழுங்கள். அவ்வளவுதான்.

ஆதித்யா எல்-1..
செவ்வாய் கிரகம், நிலவைத் தொடா்ந்து சூரியனின் புறவெளிப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்கான முனைப்பில் ஆதித்யா எல்-1 எனும் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ஸ்ட்ரோமீட்டா் உள்பட 7 விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.

சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 சுமாா் 400 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கிலோ மீட்டா் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அந்தப் பகுதியில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈா்ப்பு விசை நிலையாக இருக்கும். அதனால் அங்கு இருந்தபடி சூரியனின் வெளிப்புற பகுதியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல்-1 மேற்கொள்ள உள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலம் பெங்களூரு யூ.ஆா்.ராவ் செயற்கைக்கோள் வடிவமைப்பு மையத்திலிருந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அண்மையில் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னா் விண்கலத்தை ராக்கெட்டுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது இறுதி நிலையை அத்திட்டம் எட்டியுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது நான்காவது நாடாக இந்தியா அத்தகைய ஆய்வை முன்னெடுக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT