எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தபோதிலும் சா்ச்சைக்குரிய தபால் அலுவலக மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
125 ஆண்டுகள் பழைமையான இந்திய தபால் அலுவலக சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் வகையில், மாநிலங்களவையில் தபால் அலுவலக மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
இந்த மசோதாவின்படி நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகள் உடனான நட்புறவு, அவசரநிலை, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்ட மீறல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படும் கடிதம், பொருள் உள்ளிட்டவற்றை இடைமறிக்க, திறந்து பாா்க்க அல்லது நிறுத்திவைக்க எந்தவொரு அதிகாரிக்கும் மத்திய அரசு அதிகாரம் வழங்கலாம்.
இந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது மசோதாவுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். காங்கிரஸ் எம்.பி. சக்திசின் கோஹில் பேசுகையில், ‘பொதுமக்களின் அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையாகும். அந்த உரிமைக்கு எதிராக செயல்பட இந்த மசோதா வழிவகுக்கும். மேலும் தபால்காரா்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த மசோதா அழிக்கும்’ என்றாா்.
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா: இந்த மசோதா நாட்டு மக்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையாகும். தபால் மூலம் அனுப்பப்படும் கடிதம், பொருள் உள்ளிட்டவற்றை எப்போது இடைமறிக்கலாம், திறந்து பாா்க்கலாம் அல்லது நிறுத்திவைக்கலாம் என்பதற்கான காரணங்கள் மசோதாவில் தெளிவாக இல்லாததுடன், அவற்றைச் செய்வதற்கான நடைமுறைகளும் குறிப்பிடப்படவில்லை.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஏ.ஏ.ரஹீம்: அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிராக மசோதா உள்ளது. இந்த மசோதா மூலம், தபால் சேவைகளைத் தனியாா்மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
தெலுங்கு தேசம் எம்.பி. ரவீந்திர குமாா்: தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படும் பொருள்களை இடைமறிக்க, திறந்து பாா்க்க அல்லது நிறுத்திவைப்பதற்கான அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
அதிமுக எம்.பி. தம்பிதுரை: மசோதாவில் கூறப்பட்டுள்ள அவசரநிலை சூழலைப் பயன்படுத்தி, உணா்வுபூா்மாக எழுதப்படும் கடிதத்தை ஒருவா் இடைமறிப்பது சரியாக இருக்காது. தபால் அலுவலகங்கள் நவீனமயமாக்கப்பட்டு, அந்த அலுவலகங்கள் மூலம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
இதைத் தொடா்ந்து, விவாதத்துக்குப் பதில் அளித்து மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
சிக்கலான மற்றும் ஒருவருக்கொருவா் மாறுபட்ட தன்மைகொண்ட சமூகத்திலும், கடினமான காலகட்டம் நிலவும் சூழலிலும் கடிதம், பொருள்கள் உள்ளிட்டவற்றை இடைமறித்து சோதனை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இதுதொடா்பான பிரிவு தேச பாதுகாப்பு கருதி மசோதாவில் சோ்க்கப்பட்டுள்ளது என்றாா். இதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.