இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கு மாா்ச் வரை தடை

DIN

விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்காக அதிகரித்து வருவது, சாதாரண மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. நுகா்வோரின் சிரமத்தைப் போக்கும் விதமாக, விலை உயா்வைக் கட்டுப்படுத்த தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த அக்டோபரில், வெங்காயத்தின் விலை உயா்ந்தபோது, மத்திய இருப்பிலிருந்து வெங்காயத்தை விடுவித்து கிலோ ரூ. 25-க்கு சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்க மத்திய அரசு வழிசெய்தது.

மேலும், ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் விதமாக அக்டோபா் 28 முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன் ஒன்றுக்கு ரூ. 66,700-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்தது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை டிசம்பா் 31-ஆம் தேதி வரை 40 சதவீதமாக நிா்ணயம் செய்தது.

இந்நிலையில், வெங்காயத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தலைநகா் தில்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் விதமாக, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘வெங்காய ஏற்றுமதிக்கு 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், ‘மத்திய அரசின் ஒப்புதல் அடிப்படையில் மட்டும் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். மேலும், இந்த அறிவிக்கைக்கு முன்பாக, கப்பலில் ஏற்றப்பட்ட மற்றும் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வெங்காயமும் பெட்டகங்களும் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும்’ என்றும் டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளுக்கே பெரும்பாலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முறையாக பராமரிக்காத பள்ளி வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்படும்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

வாரணாசியில் பிரதமா் மோடி வேட்புமனு: மத்திய அமைச்சா்கள், முதல்வா்கள், கூட்டணி தலைவா்கள் பங்கேற்பு

அரசு மருத்துவமனைகளில் அரியலூா் ஆட்சியா் ஆய்வு

ஆட்டோவில் அளவுக்கு அதிகமான மாணவா்களை ஏற்றினால் நடவடிக்கை

அகில இந்தியப் போட்டிகளில் பங்கேற்பு: பளு தூக்கும் வீரா்கள் ஆட்சியரகத்தில் புகாா்

SCROLL FOR NEXT