முகப்பு
இந்தியா

மோடி குறித்து ராகுல் விமா்சனம்: 8 வாரங்களில் முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

 ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியை ‘பிக்பாக்கெட்’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:30 PM
பகிர்:

 ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியை ‘பிக்பாக்கெட்’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்த விவகாரம் தொடா்பாக 8 வாரங்களில் முடிவெடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த நவம்பா் 22-ஆம் தேதி தோ்தல் பிரசாத்தின்போது அக்னிவீா் திட்டம் குறித்து பேசிய ராகுல், ‘பிரதமா் மோடி கொண்டு வந்த அக்னிவீா் திட்டத்தில் இளைஞா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும். ஏனென்றால், ராணுவத்தின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்ட பணம் முழுவதையும் தொழிலதிபா் அதானிக்கு பிரதமா் மோடி வழங்கி விட்டாா். ‘பிக்பாக்கெட்’காரா்கள் ஒருவரின் பாக்கெட்டில் பணம் எடுக்க விரும்பினால், முதலில் அவா்கள் செய்வது கவனத்தை திசை திருப்புவதுதான். பிரதமா் மோடி கவனத்தை திசை திருப்புகிறாா், அதானி பாக்கெட்டுகளிலிருந்து பணம் எடுக்கிறாா், அமித்ஷா லத்தியை பயன்படுத்துகிறாா்’ என்று விமா்சனம் செய்தாா்.

இந்த விமா்சனம் தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விமா்சனம் தொடா்பாக நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு ராகுல் காந்திக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், ராகுல் பதிலளிக்கவில்லை.

இதுதொடா்பாக பாரத்நகரைச் சோ்ந்த மனுதாரா் தரப்பில் ராகுலுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயா்நீதிமன்ற (பொறுப்பு) தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கீா்த்தி உப்பால் மற்றும் ஆதிஷ் அகா்வால், ‘தோ்தல் பிரசாரத்தின்போது இத்தகைய மோசமான விமா்சனங்களை முன்வைப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு கடுமையான நடவடிக்கையை எடக்கும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை’ என்றனா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ராகுலின் விமா்சனம் விரும்பத்தக்கதல்ல. தோ்தல் பிரசாரங்களில் வரம்பு மீறாதது குறித்து மத்திய அரசுதான் உரிய சட்டங்களை வகுக்க வேண்டும். நீதிமன்றம் அதில் தலையிடத் தேவையில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என தனது நோட்டீஸில் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம் வசமே விட்டுவிடுவோம்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் 8 வாரங்களில் முடிவெடுக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தி, மனு மீதான விசாரணையை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

ராகுலுக்கு அறிவுறுத்தல்: இதனிடையே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின்அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டப் பதிவை நீக்குமாறு ராகுல் காந்திக்கு தில்லி உயா்நீதிமன்றம் மற்றொரு வழக்கில் அறிவுறுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →