ரெளடி கும்பல்.. சக கடைக்காரரை மிரட்டிய நபர் கைது!
கடனை அடைக்க இப்படியொரு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர் கூறியுள்ளார்.
35 வயதான நகை கடைக்காரர், சக நகை கடைக்காரரை ரெளடி கும்பலின் பெயரைச் சொல்லி மிரட்டி பணம் பறிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு தில்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் நகை கடை வைத்திருப்பவர் விபின் குப்தா. இவர் பெரிய கடனில் இருந்ததால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். குரல் மாற்றும் கருவியைப் பயன்படுத்தி அவர் புகார்தாரரை ரூ. 2 கோடி பணம் மற்றும் 2 கிலோ தங்கம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து காவலர்கள் தெரிவித்தாவது: “புகார்தாரர் சங்கம் விஹார் பகுதியில் நகை கடை வைத்துள்ளார். இரண்டு வெவ்வேறு அலைபேசி எண்களில் இருந்து டிச.14 முதல் அவருக்கு அழைப்பு வந்ததாகவும் அழைப்பில் நீரஜ் பவனா ரெளடி கும்பலின் ஆள் என பேசி ஒருவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஜன.1-க்குள் தரவிட்டால் விபரீதமாக நடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது”
புகார்தாரருக்கு வந்த அழைப்புகளின் எண்ணைப் பின்தொடர்ந்து இதனை செய்தது விபின் குப்தா என காவலர்கள் கண்டறிந்துள்ளனர். அவரிடம் இருந்து கார், கீபேட் அலைபேசி, 3 சிம் கார்டுகள், குரல் மாற்றும் கருவி உள்ளிட்டவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதையும் படிக்க: முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைப்பு!
குப்தா அவரது நண்பரோடு இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.