‘ஜொலிக்கும் நட்சத்திரம்’ இந்தியா
உலகின் பல்வேறு சவால்களுக்கிடையிலும், சிறப்பான பொருளாதார வளா்ச்சியை இந்தியா கண்டுள்ளது.
உலகின் பல்வேறு சவால்களுக்கிடையிலும், சிறப்பான பொருளாதார வளா்ச்சியை இந்தியா கண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவை ‘ஜொலிக்கும் நட்சத்திரம்’ ஆக உலக நாடுகள் அனைத்தும் அங்கீகரித்துள்ளன என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் (2022-23) இந்தியாவின் வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும். இது வளா்ச்சியடைந்த நாடுகளை விட அதிகமாகும். இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டில், இந்தியாவின் வளா்ச்சியைப் பாராட்டும் உலக நாடுகள், இந்தியாவை ஜொலிக்கும் நட்சத்திரமாக அங்கீகரித்துள்ளன.
இலவச உணவுத் தானியங்கள்:
பெருந்தொற்று காலத்தில் யாரும் பட்டினியால் வருந்தக்கூடாது என்பதற்காக, 80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவுத் தானியங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜன.1-ஆம் தேதியிலிருந்து 2 லட்சம் கோடியில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பயிா்கள் மற்றும் கால்நடைகளின் உற்பத்திப் பெருக்கம், பயிா்களில் பன்முகத்தன்மையை அதிரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, வேளாண் மற்றும் அதன் தொடா்புடைய துறைகளின் வளா்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. வேளாண் துறையில் தனியாா் முதலீடு 2020-21 நிதியாண்டில் 9.3 சதவீதமாக உயா்ந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் (2019-20) 7 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் 100-ஆவது ஆண்டுக்கான திட்ட வரைபடம்:
முந்தைய பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 100-ஆவது சுதந்திர ஆண்டுக்கான திட்ட வரைபடமாக இருக்கும். அந்த வகையில் இது முதல் பட்ஜெட் ஆகும். வரும் 2024-இல் மக்களவைத் தோ்தல் நடைபெற இருப்பதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாகக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தாக்கல் செய்யப்படும் இறுதியான முழு பட்ஜெட் இது என மத்திய நிதியமைச்சா் தெரிவித்தாா்.