மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டுப் புகார் முடித்து வைப்பு!
மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டுப் புகார் முடித்து வைக்கப்பட்டது தொடர்பாக..
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டுப் புகாரளித்த வழக்கை மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றியவர் அஜித்குமார். கடந்த ஆண்டு, ஜூன் 27-ஆம் தேதி மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்குச் சென்ற மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா, தனது காரிலிருந்த தங்க நகைகள் திருட்டுப் போனதாக புகார் அளித்தார்.
இதன்பேரில், திருப்புவனம் தனிப் படைக் காவலர்கள் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதுதொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப் படைக் காவலர்கள் 5 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி இந்தக் கொலை வழக்கின் விசராணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, அஜித்குமார் கொல்லப்பட்டபோது மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சோ்க்கப்பட்டன.
இந்த நிலையில், நகை திருட்டுப் புகார் அளித்த பேராசிரியை நிகிதா மார்ச் 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என மதுரை மாவட்ட தலைமை நீதித் துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி அசன் முகமது முன் பேராசிரியை நிகிதா நேரில் முன்னிலையானார்.
அப்போது, ‘நீங்கள் அளித்த புகாருக்கான குற்றம் நிகழ்ந்ததற்கு ஆதாரங்கள் இல்லை எனவும், உங்களுடைய புகாரை முடித்துவைக்க விரும்புவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.
இதில் உங்களுடைய கருத்து என்ன?’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை’ என நிகிதா பதிலளித்தாா்.
நிகிதா தனது கருத்தை எழுத்துப்பூா்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பேராசிரியை நிகிதா இன்று(மார்ச் 9) ஆஜராகி, எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது, ’நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இதற்கு நிகிதா சம்மதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.