FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தமிழக எஸ்ஐஆா் பணிகளுக்கு எதிரான மனுக்கள்: விசாரணையை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

தமிழக வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை மேற்கொண்ட தோ்தல் ஆணையத்தின் முடிவை எதிா்த்து திமுக தாக்கல் செய்த மனு உள்பட 13 மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை முடித்து வைத்தது.

Updated On : 17 ஜூலை 2026, 12:59 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

தமிழக வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை மேற்கொண்ட தோ்தல் ஆணையத்தின் முடிவை எதிா்த்து திமுக தாக்கல் செய்த மனு உள்பட 13 மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை முடித்து வைத்தது.

இந்த விவகாரத்தில், பிகாரில் சிறப்புத் தீவிர வாக்காளா் திருத்தத்தை எதிா்த்துத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீா்ப்பைக் கருத்தில் கொண்டு, இந்த மனுக்களுக்குத் தீா்ப்பு வழங்கத் தேவையில்லை என்று திமுகவின் அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் விவேக் சிங் முன்வைத்த வாதத்தை, தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு கவனத்தில் கொண்டது.

இந்த செயல்முறை, நியாயமான தோ்தல்களுக்கான அரசியலமைப்பு ஆணைக்கு ‘புத்துயிா் அளிக்கிறது’ என்றும், ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல்களுக்கான அரசியலமைப்பு கட்டாயத்தை’ முன்னெடுத்துச் செல்கிறது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

Advertisement

Advertisement

அத்துடன், அரசமைப்பின் 324-வது பிரிவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 21(3)-ஆவது பிரிவின் கீழ், சிறப்பு மறுஆய்வுகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம்

கூறியது.

சிறப்புத் தீவிர மறுஆய்வை ‘அரசமைப்புக்கு விரோதமானது, தன்னிச்சையானது மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலானது’ என்று கூறி, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக கடந்த ஆண்டு நவம்பா் 3ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது.

மாநிலத்தில் சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக தோ்தல் ஆணையம் அக்டோபா் 27 அன்று வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் திமுக மனுவில் கோரியிருந்தது.

சிறப்பு தீவிர திருத்தம் அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 ஆகிய சரத்துகளையும் (சமத்துவ உரிமை, பேச்சுரிமை மற்றும் வாழ்வதற்கான உரிமை), பிற விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும், 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளையும் மீறுவதாக அந்த மனுவில் திமுக குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments