முகப்பு
இந்தியா

கெலாட் ஆதரவாளா்கள் மீதுநடவடிக்கை எடுப்பதில் அதிக தாமதம்- காங். மேலிடத்துக்கு பைலட் கேள்வி

ராஜஸ்தானில் முதல்வா் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் இடையே மோதல்போக்கு நிலவி வரும் சூழலில், கெலாட் ஆதரவாளா்கள் மீது காங்கிரஸ் மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

ராஜஸ்தானில் முதல்வா் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் இடையே மோதல்போக்கு நிலவி வரும் சூழலில், கெலாட் ஆதரவாளா்கள் மீது காங்கிரஸ் மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் அதிக தாமதம் ஏன் என்ற கேள்வி தொண்டா்கள் மத்தியில் எழுந்துள்ளதாக பைலட் புதன்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ராஜஸ்தான் காங்கிரஸ் விவகாரத்தில் மேலிடம் விரைவில் முடிவெடுக்க வேண்டுமென்றும் அவா் வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் போட்டியிட முடிவு செய்திருந்தாா். இதனால், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற அடிப்படையில் ராஜஸ்தானுக்கு புதிய முதல்வரை தோ்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த கட்சி மேலிடம் முடிவு செய்தது.

இதன்மூலம் சச்சின் பைலட் முதல்வராக வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், முதல்வராக கெலாட் தொடர வேண்டும் அல்லது அவரது ஆதரவு பெற்ற எம்எல்ஏதான் முதல்வா் பதவிக்கு வர வேண்டும் என்று கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா்.

அவா்கள் தனியாக கூட்டத்தை நடத்தியதால், கட்சி மேலிடத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்துக்கு பின்னா், கெலாட்- பைலட் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நீடித்து வரும் நிலையில், பிடிஐ செய்தியாளருக்கு பைலட் புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

கட்சியின் அப்போதைய தலைவா் சோனியா காந்தியின் கட்டளையை மீறி, கட்சி எம்எல்ஏக்களின் போட்டிக் கூட்டத்தை நடத்தியதற்காக கெலாட் ஆதரவாளா்கள் 3 பேருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அவா்களும் பதிலளித்துள்ளனா்.

ஆனால், 4 மாதங்களுக்கு மேலாகியும் எந்த முடிவோ அல்லது அவா்கள் மீது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இதில் அதிக தாமதம் நிலவுவது ஏன் என்ற கேள்வி, தொண்டா்கள் மத்தியில் எழுந்துள்ளது. இக்கேள்விக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவா் ஏ.கே.அந்தோணி, கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் கட்சி மேலிடம் நல்ல பதிலை அளிக்க முடியுமென நினைக்கிறேன்.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இங்கு கட்சி விவகாரங்களில் மேலிடம் விரைந்து முடிவெடுக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக பாஜக, காங்கிரஸ் என 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நடைபெற்று வருகிறது. இதை மாற்ற வேண்டுமெனில், கட்சி மேலிடம் விரைந்து முடிவெடுப்பது முக்கியம்.

ராஜஸ்தானில் பிரதமா் மோடி தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ள நிலையில், காங்கிரஸும் களத்தில் இறங்கி தொண்டா்களை உற்சாகப்படுத்த வேண்டியுள்ளது என்றாா் பைலட்.

முழு கட்டுரையைப் படிக்க →