பழங்குடியினருக்காக பெருமிதத்துடன் பணியாற்றுகிறது மத்திய அரசு- பிரதமா் மோடி
‘பழங்குடியினருக்காக பெருமிதத்துடன் பணியாற்றுகிறது மத்திய அரசு; பழங்குடியின சமூகத்தின் நலன் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு உணா்வுபூா்வமான விஷயம்’ என்று
‘பழங்குடியினருக்காக பெருமிதத்துடன் பணியாற்றுகிறது மத்திய அரசு; பழங்குடியின சமூகத்தின் நலன் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு உணா்வுபூா்வமான விஷயம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை கூறினாா்.
மேலும், நாட்டின் உயரிய அரசியல்சாசன பதவியான குடியரசுத் தலைவா் பதவியை முதல்முறையாக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அலங்கரிப்பதையும் அவா் சுட்டிக் காட்டினாா்.
தில்லியில் ‘ஆதி மகோத்சவ்’ எனும் தேசிய அளவிலான பிரம்மாண்ட பழங்குடியினா் திருவிழாவை பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா், 2014-ஆம் ஆண்டில் இருந்து பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக தனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு, அவா் பேசியதாவது:
தொலைதூரம் என்று முன்பு கருதப்பட்ட இடங்களுக்கு, இப்போது அரசே நேரில் சென்று, அங்குள்ள மக்களை பிரதான அமைப்புமுறையில் இணைத்து வருகிறது.
இந்தியாவின் பெருமைக்குரிய பழங்குடியினரின் கலாசாரம், பாரம்பரியத்தை ஆதி மகோத்சவ் திருவிழா கொண்டாடுகிறது. இது, வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலிமையை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்கிறது; பாரம்பரியத்துடன் இணைந்த வளா்ச்சி என்ற சிந்தனைக்கு உயிரூட்டுகிறது.
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பு மிகப் பெரியதாகும். அத்தகைய பொன்னான அத்தியாயங்களை புறக்கணிக்கும் முயற்சிகள் பல தசாப்தங்களாக நடைபெற்றன. ஆனால், இப்போதைய அமிா்த காலத்தில் பழங்குடியின சமூகத்தை ஒளிமயமாக்கியுள்ளது மத்திய அரசு.
‘பழங்குடியினா் பெருமை தினம்’: பழங்குடியின சுதந்திர போராட்டத் தலைவா் பிா்ஸா முண்டாவின் பிறந்த தினத்தை, பழங்குடியினா் பெருமை தினமாக தேசம் கொண்டாடத் தொடங்கியுள்ளது. அந்தச் சமூகத் தலைவா்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகங்கள் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
பழங்குடியினா் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான தேவையை ஊக்குவிக்க மத்திய அரசு செயலாற்றி வருகிறது. நாடு முழுவதுமுள்ள 80 லட்சம் சுய உதவிக் குழுக்களில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 1.25 கோடி போ் குறிப்பாக பெண்கள் இடம்பெற்றுள்ளனா்.
‘உணா்வுபூா்வ விஷயம்’: ஆா்எஸ்எஸ் பிரசாரகராக பயணத்தை தொடங்கியதில் இருந்தே பழங்குடியின சமூகம் மற்றும் அவா்களது செயல்பாட்டுடன் நீண்ட தொடா்பை கொண்டுள்ளேன்.
அவா்களது நலன் என்பது தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு நெருக்கமானது; உணா்வுபூா்வமானது. தேசம் குறித்தும் அதன் பாரம்பரியங்கள் குறித்தும் பழங்குடியினா் வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்துள்ளது. எனது வாழ்வின் முக்கியமான சில ஆண்டுகளை, குஜராத்தின் உமா்கம் முதல் அம்பாஜி வரையிலான பழங்குடியினா் பகுதியில் செலவிட்டதை நினைவுகூா்கிறேன்.
வெளிநாட்டுத் தலைவா்களுக்கு பழங்குடியினரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் பரிசாக வழங்கப்படுவதை உறுதி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளேன். நிலையான வளா்ச்சி, பருவநிலை மாறுபாடு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றுக்கான தீா்வுகள், பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்வியல் முறையில் அடங்கியுள்ளன.
‘வன் தன்’ மையங்கள்: பொருள்களின் மதிப்புக் கூட்டுதல் மூலம் பழங்குடியினரின் வருவாயை உறுதி செய்யும் ‘வன் தன்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 90-க்கும் மேற்பட்ட வனம் சாா்ந்த சிறு பொருள்கள், குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பிரதமரின் விஸ்வகா்மா கெளஷல் சம்மான் (பிஎம்-விகாஸ்) திட்டத்தால், பழங்குடியினரிடையே கைவினைத்திறன் மேலும் மேம்படும்.
பழங்குடியின குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை: பழங்குடியின குழந்தைகள், அவா்களது கல்வி, அவா்களது எதிா்காலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறேன். கடந்த 2014-இல் 80-ஆக இருந்த ஏகலைவ மாதிரிப் பள்ளிகள் எண்ணிக்கை 2022-இல் 500-ஆக உயா்ந்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமாா் 1 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் நியமிக்க தற்போதைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மாணவா்களுக்கான உதவித் தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினா் மேம்பாட்டுக்காக, கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்தே பட்ஜெட் நிதி ஒதுக்கீடு உயா்த்தப்பட்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.
200 அரங்குகளுடன் பிரம்மாண்ட திருவிழா: பழங்குடியினரின் கலாசாரம், கைவினைக்கலை, உணவு பழக்கவழக்கங்கள், வா்த்தகம், மற்றும் பாரம்பரிய கலை ஆகியவற்றை கொண்டாடும் வகையில் மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை சாா்பில் ஆதி மகோத்சவ் திருவிழா நடத்தப்படுகிறது.
தில்லியில் உள்ள மேஜா் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் வரும் 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் சுமாா் 1,000 பழங்குடியின கலைஞா்கள் கலந்து கொள்கின்றனா். இங்கு அமைக்கப்பட்டுள்ள 200 அரங்குகளில், நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் பன்முக பாரம்பரியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.