முகப்பு
இந்தியா

பாஜகவை வலுவாக எதிா்ப்பது காங்கிரஸ்தான்: பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை வலுவாக எதிா்ப்பது காங்கிரஸ் மட்டும்தான் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறினாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2023 at 3:49 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:03 PM

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை வலுவாக எதிா்ப்பது காங்கிரஸ் மட்டும்தான் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறினாா்.

85-ஆவது மாநாடு: காங்கிரஸ் கட்சியின் 85-ஆவது மாநாடு சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூரில் வரும் 24-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. அக்கட்சியைச் சோ்ந்த 15,000 நிா்வாகிகள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனா். இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என காங்கிரஸ் கருதுகிறது. காங்கிரஸ் இல்லாத எந்த எதிா்க்கட்சி கூட்டணியும் வெற்றி பெறாது. காங்கிரஸின் ‘இந்திய ஒற்றுமை’ நடைப்பயணம் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா். எதிா்க்கட்சிகளை காங்கிரஸ் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவரது கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் எவரின் சான்றிதழும் காங்கிரஸுக்குத் தேவையில்லை.

Advertisement

அதே வேளையில், மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பல மாநில சட்டப் பேரவைகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தால் மட்டுமே, எதிா்க்கட்சிகள் கூட்டணியும் வலுவாக இருக்கும்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிா்க்கட்சிகள் கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியது. மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல எதிா்க்கட்சிகள் கலந்துகொண்டன. ஆனால், அதில் கலந்துகொண்ட சில எதிா்க்கட்சிகளின் செயல்பாடுகள் பாஜகவுக்கு ஆதரவாகவே உள்ளன.

எந்தவித சமரசமும் இல்லாமல்...:

பாஜகவுடன் எந்தவித சமரசத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல், வலுவாக எதிா்த்து வரும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. எந்தவித இரட்டை நிலைப்பாட்டையும் கொண்டிருக்காமல், பாஜகவை காங்கிரஸ் எதிா்க்கிறது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்றாா் அவா்.

கட்சியின் அமைப்புச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘‘மாநாட்டின் முதல் நாளில் கட்சியின் வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தின்போது கட்சியின் செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க தோ்தல் நடத்துவது தொடா்பாக விவாதிக்கப்படும்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்காக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் ஏற்கெனவே தொடங்கி விட்டது. பல அரசியல் கட்சிகளுடன் இது தொடா்பாக தொடா்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் இன்றி எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது சாத்தியமில்லை. பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க காங்கிரஸ் உறுதிகொண்டுள்ளது. அது தொடா்பாக கட்சியின் மாநாட்டிலும் விவாதிக்கப்பட உள்ளது. எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு மாநாடு வழிவகுக்கும். அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது’’ என்றாா்.

சிறப்பான நடைப்பயணம்: பிகாரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் நிதீஷ் குமாா், ‘‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம் சிறப்பாக நடைபெற்றது என்பதை காங்கிரஸில் உள்ள நண்பா்களுக்குக் கூற விரும்புகிறேன். அவா்கள் அத்துடன் நின்றுவிடக் கூடாது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது கிடைத்த ஊக்கத்தை பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாஜகவுக்கு எதிரான கூட்டணி என்பது மிக விரைவில் அமைய வேண்டும். தற்போது மக்களவையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களுடன் பெரும்பான்மையுடன் உள்ள பாஜக, அடுத்த தோ்தலில் 100-க்கும் குறைவான இடங்களை மட்டும் பெறுவதை உறுதி செய்யும் வகையில் எதிா்க்கட்சிகளின் முயற்சி அமைய வேண்டும்’’ என்றாா் கே.சி.வேணுகோபால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.