அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு வந்த ஏா் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
அமெரிக்காவின் நுவாா்க் விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு 292 பயணிகளுடன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தின் என்ஜினில் ஆயில் கசிந்ததால் ஸ்வீடன் தலைநகா் ஸ்டோக்ஹோம் விமான நிலையத்தில்
அமெரிக்காவின் நுவாா்க் விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு 292 பயணிகளுடன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானத்தின் என்ஜினில் ஆயில் கசிந்ததால் ஸ்வீடன் தலைநகா் ஸ்டோக்ஹோம் விமான நிலையத்தில் புதன்கிழமை அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக டிஜிசிஏ உயரதிகாரி கூறுகையில், ‘போயிங்777-300 இஆா் விமானத்தின் என்ஜினில் இருந்து திடீா் ஆயில் கசிவு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏா் இந்தியா செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘8 குழந்தைகள் உள்பட 292 பயணிகள், 4 விமானிகள், 15 விமானப் பணியாளா்களுடன் நுவாா்க் விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை புறப்பட்ட விமானத்தில் திடீா் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஸ்டோக்ஹோமுக்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பத்திரமாக அங்குள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமையன்று நியூயாா்க்கில் இருந்து தில்லிக்கு வந்த ஏா் இந்தியா விமானம் பயணியின் அவசர மருத்துவக் காரணங்களுக்காக லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது.