உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்தில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் நியமிப்பதற்கு எதிரான மனு: ரூ. 50,000 அபராதத்துடன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி
உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு
உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனா்.
வழக்குரைஞா் அசோக் பாண்டே என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான நிபந்தனைகளைக் குறிப்பிடும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 217-இல் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி, ‘மாநில வழக்குரைஞா் சங்கத்தில் (பாா்) வழக்குரைஞராக பதிவு செய்து பின்னா், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் பணியைத் தொடா்ந்து வருவோா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியற்றவா்கள்’ என்று தெரிவிக்கிறது. எனவே, இத்தகைய வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கருத்தில் கொள்ளக்கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றுபவா்களை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு பிரிவும் தடை விதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வழக்குரைஞரும் அவா்களின் சொந்த மாநில வழக்குரைஞா் சங்கத்தில் வழக்குரைஞராக பதிவு செய்திருப்பா்.
எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. அந்த மனு மீதான விசாரணையால் நீதிமன்ற நேரம் முழுமையாக வீணடிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதோடு, மனுதாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை 4 வாரங்களுக்குள் உச்சநீதிமன்ற மத்தியஸ்தம் மற்றும் சமரச திட்டக் குழுவிடம் வரவு (டெபாசிட்) வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.