முகப்பு
இந்தியா

 காற்றின் தரக் கண்காணிப்பு அமைப்பு முறைக்கான தொழில்நுட்பம் அறிமுகம்:  வணிகரீதியான பயன்பாட்டுக்கு ஒப்பந்தங்கள்

காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் அமைப்பு முறைக்கான தொழில்நுட்பத்தை மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்பத் துறை புதன்கிழமை அறிமுகம் செய்தது. இந்தக் கண்டுபிடிப்பை வணிக ரீதியாகப் பயன்படுத்த

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
பகிர்:

காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் அமைப்பு முறைக்கான தொழில்நுட்பத்தை மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்பத் துறை புதன்கிழமை அறிமுகம் செய்தது. இந்தக் கண்டுபிடிப்பை வணிக ரீதியாகப் பயன்படுத்த அனுமதிக்க தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒப்பந்தமும் கையொப்பமாகியது.
 மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் உள்ள நிறுவனமான சி-டாக் என்கிற நவீன கணினி மேம்பாட்டு மையம், பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மின்னணுவியல் பயன்பாடு தேசிய திட்டத்தில் வேளாண்மை மற்றும் சுற்றுச் சூழலுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை, ஆய்வுகளை மேற்கொண்டு அளித்தும் வருகிறது. இதில் சி-டாக் டெக்ஸ்மின், ஐஎஸ்எம் போன்றவற்றுடன் இணைந்து சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கண்காணிக்கும் வகையில், வெளிப்புறக் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் நிலையத்தை வடிவமைத்துள்ளது.
 காற்று தர கண்காணிப்பு அமைப்பின் மூலம் (ஏஐ-ஏக்யூஎம்எஸ் பதிப்பு 1.0) மாசு நுண் துகள்களான பி.எம். 1.0, பி.எம். 2.5, பி.எம்.10.0, சல்ஃபர்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு, கரியமில வாயு, ஆக்ஸிஜன் போன்ற காற்றின் தர பகுப்பாய்வுகளையும், சுற்றுப்புற வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவையும் இந்த ஏஐ-ஏக்யூஎம்எஸ் மூலம் அளவிடப்படுகிறது.
 காற்று தரத்தை கண்காணிக்கும் அமைப்பு முறை தொழில்நுட்பத்தை அமைச்சகத்தில் செயலர் அல்கேஷ் குமார் சர்மா புதன்கிழமை அறிமுகப்படுத்தி வைத்தார்.
 சுரங்கங்கள், சிமெண்ட் தொழில்சாலைகல் போன்றவற்றில் இந்த அமைப்பு பயன்ப டுத்தப்பட்டு அறியப்பட்டுள்ளது. இது போன்ற தொழில்களிலும் வணிக ரீதியாக இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வணிகமயமாக்கலுக்காக மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம், ஜே.எம். என்விரோ லேப் தனியார் நிறுவனத்திற்கு காற்றுத் தர கண்காணிப்பு அமைப்பு முறையின் தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்துள்ளது.
 மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை செயலர் அல்கேஷ் குமார் சர்மா முன்னிலையில் சி-டாக் மையத்தின் தலைவர் ஓம் கிருஷ்ணா சிங்கும் ஜே.எம். என்விரோ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபா தனுஜா ஆகியோர் தில்லியில் தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
 நீர் நிலை ரசாயனங்கள்: மேலும், சி-டாக் நிறுவனம், மேற்கு வங்கம்,பரக்பூரில் உள்ள மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நீர்வாழ் சுற்றுச் சூழல் அமைப்புகளில் நாளமில்லாச் சுரப்பிகளை சீர்குலைக்கும் ரசாயனங்களை(இடிசி) கண்டறிவதற்கான தொழில்நுட்பத்திற்கான பயோசென்சிங் அமைப்பையும் செவ்வாய்க்கிழமை மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் அல்கேஷ் குமார் அறிமுகப்படுத்தினார்.
 நீர் நிலைகளின் இடிசி தர அளவுகளை பகுப்பாய்வு செய்யும் இந்த பயோசென்சிங் தொழில் நுட்பத்தை வணிகமயமாக்கும் தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒப்பந்தம் ஆரோக்கியம் மெடிசாஃப்ட் சொல்யூஷன் என்கிற நிறுவனத்தோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.