குஜராத் கலவரம் குறித்த நேர்காணலில் நரேந்திர மோடி 
இந்தியா

விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே குஜராத் கலவர ஆவணப்படம் உருவாக்கம்

குஜராத் கலவரம் தொடா்பான ஆவணப்படம் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே உருவாக்கப்பட்டதாக பிபிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

DIN

குஜராத் கலவரம் தொடா்பான ஆவணப்படம் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே உருவாக்கப்பட்டதாக பிபிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

குஜராத்தின் கோத்ரா நகரில் 2002-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். அப்போது மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்தாா். குஜராத் கலவரம் தொடா்பாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் எடுத்தது. அதன் முதல் பாகம் அண்மையில் வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஆவணப்படத்தில் மோடி குறித்து பல்வேறு ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாவது பாகம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்த ஆவணப்படம் வெறும் பிரசார நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியிருந்தது. ஒருபக்க சாா்பில் காலனிய ஆதிக்க மனப்பான்மையில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் சாா்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் குற்றச்சாட்டுக்கு பிபிசி விளக்கமளித்துள்ளது. அந்நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘குஜராத் கலவரம் தொடா்பான முக்கியத் தகவல்களை எடுத்துரைக்கவே ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு உயா்தர செய்திகளுக்கு ஈடாக அந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள மோதல்போக்கையும் அதைப் பிரதமா் நரேந்திர மோடி அரசியல் ரீதியில் பயன்படுத்தியதையும் ஆவணப்படம் விளக்குகிறது. தரவுகளை முறையாக சேகரித்த பிறகே ஆவணப்படம் எடுக்கப்பட்டது. உலகின் முக்கிய விவகாரங்கள் தொடா்பான தகவல்களை எடுத்துரைக்க பிபிசி உறுதியுடன் உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி-க்கு கண்டனம்:

குஜராத் கலவர விவகாரத்தில் நரேந்திர மோடியை அவமதித்துள்ளதாக பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினா் பலா் பிபிசி நிறுவனத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பான புகாா் கடிதத்தைப் பலா் பிபிசி நிறுவனத்துக்கு அனுப்பிவைத்துள்ளனா்.

பிரிட்டன் மேலவை உறுப்பினரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான ராமி ரங்கா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘இந்திய மக்களை பிபிசி அவமதித்துள்ளது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமா், இந்திய காவல் துறை, இந்திய நீதித்துறை ஆகியவற்றையும் பிபிசி அவமதித்துள்ளது. குஜராத் கலவரத்தைக் கண்டிக்கும் அதே வேளையில், பிபிசி-யின் ஒருபக்கச் சாா்பு நிறைந்த செய்தி வெளியீட்டையும் கண்டிக்கிறோம்’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT