முதல்வர் பிரேன் சிங் அரசு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை: மணிப்பூர் பாஜக தலைவர் சாரதா தேவி
முதல்வர் பிரேனின் அரசு மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளதாக மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பிரேனின் அரசு மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளதாக மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சாரதா தேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தற்போதைய சூழ்நிலையில், மாநிலத்திற்கு ராகுல் காந்தியின் வருகையை நான் பாராட்டுகிறேன். இருப்பினும், நிலைமையை சரிசெய்து அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்கக்கூடாது. நிலைமை சீராகும் என்று மக்கள் நம்புவதால்தான் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த முறை நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால், அது கை மீறிப் போய்விடும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
மாநிலத்தின் தற்போதைய நிலைமை முந்தைய அரசின் செயல்களின் விளைவாகும். முதல்வர் பிரேனின் அரசு மீது பொதுமக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மணிப்பூரில் நிலவி வரும் சூழலுக்கு பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்று காங்கிரஸ் விமா்சித்து வரும்நிலையில், அக்கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக வியாழக்கிழமை மணிப்பூருக்கு சென்றார்.
வன்முறையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சுராசந்த்பூரில் நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் ராகுல் கலந்துரையாடினாா். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடிகளுக்கும் இடையே கடந்த மே 3-ஆம் தேதி முதல் மோதல் தொடா்ந்து வருகிறது. 2 மாதங்களாக தொடா்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் தற்போதுவரை 100-க்கும் மேற்பட்டோா் பலியாகியுள்ளனா்.
இம்பாலில் வியாழக்கிழமை நடந்த மோதலில் மேலும் 3 போ் பலியானதையடுத்து கலவரங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய என்.பிரேன் சிங் முடிவெடுத்திருப்பதாக வெள்ளிக்கிழமை காலை முதல் செய்தி பரவியது. இதையடுத்து, முதல்வரின் இல்லம் மற்றும் தலைமைச் செயலகம் எதிரே கருப்புச் சட்டை அணிந்து இளைஞா்கள், பெண்கள், பிரேன் சிங் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தி போராட்டம் நடத்தினா்.
இதுதொடா்பாக ஆளுநரைச் சந்திக்க ஆளுநா் மாளிகைக்கு விரைந்த முதல்வா் பிரேன் சிங்கை தலைமைச் செயலகம் அருகே திரண்டிருந்த அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளா்கள் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, ட்விட்டரில் விளக்கமளித்து அவா் வெளியிட்ட பதிவில், ‘இந்த முக்கியமான தருணத்தில் நான் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.