ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சைரன் ஒலித்தபடி வேகமாகச் சென்ற ஆம்புலன்ஸ், டீ கடையில் நிற்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஷீர்பாக் சந்திப்பு சிக்னலில், திங்கள்கிழமை இரவு சைரன் ஒலித்தபடி தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்துள்ளது.
ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளி இருப்பதாக எண்ணி சிக்னலில் நின்ற போக்குவரத்து காவலர், ஆம்புலன்ஸ் செல்வதற்காக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஆனால், சிக்னலைத் தாண்டி 100 மீட்டர் தொலைவில் சாலையோரம் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது.
இதனை கவனித்த போக்குவரத்து காவலர் ஆம்புலன்ஸ் அருகே சென்று பார்த்தபோது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இரு செவிலியர்கள் மற்றும் சில மருத்துவமனை ஊழியர்கள் அங்குள்ள கடையில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
விசாரணையில் ஆம்புலன்ஸில் நோயாளி இல்லாததையும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சைரன் போட்டதையும் காவலர் உறுதி செய்தார்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த காவலர், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக ரூ. 1,000 அபராதம் விதித்ததுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அனைத்தும் போக்குவரத்து காவலரின் சட்டை கேமிராவில் பதிவான நிலையில், அந்த காணொலியை பகிர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தெலங்கானா டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.