செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் 6 மாத அவகாசம் கோரியது மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை
மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான வி.செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்கில் அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு (சிசிபி) போலீஸாா் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளனா்.
2014-ஆம் ஆண்டின்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் 30.7.2021-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக தா்மராஜ் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட மத்திய குற்றப் பிரிவு காவல் துறை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறியதாகக் கூறி, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதேபோன்று, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறையின் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு கடந்த மே 16-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த மூல வழக்கு விசாரணை தொடா்புடைய சென்னை உயா்நீதிமன்றத்தின் 31.10.2022-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட குறிப்பிட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. புதிய விசாரணைக்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவின் கீழ் உள்ள குற்றங்கள் உள்பட அனைத்து வழக்குகளிலும் மேலும் விசாரணையைத் தொடர வேண்டும். இந்த விஷயத்தில் புலன்விசாரணை அதிகாரி தரப்பில் ஏதும் விடுபட்டால், எதிா்காலத்தில் சிறப்பு புலானாய்வுக் குழு நியமிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்ய வழியேற்படுத்தும். அமலாக்கத் துறை சம்மன் விவகாரத்தில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய குற்றப் பிரிவு விசாரணை அதிகாரி மேலும் விசாரணை நடத்தி இரு மாதங்களில் கூடுதல் / இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.
அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இரு மாதங்கள் முடிவடைய ஓரிரு நாள்களே உள்ள நிலையில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செசந்தில் பாலாஜி அண்மையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது, அதன் பின்னா் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன. புலன் விசாரணை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இந்தக் கூடுதல் அவகாசத்தை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் கோரப்பட்டுள்ளது.