சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகளை அறிவித்தது எப்படி?
சென்னை மெட்ரோ ரயிலில் அதிகமுறை பயணித்த பயணிகளுக்கு பரிசுகள் கிடைத்திருப்பது குறித்து அறிவிக்க புதிய முறையை மெட்ரோ நிர்வாகம் பின்பற்றியிருக்கிறது.
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் அதிகமுறை பயணித்த பயணிகளுக்கு பரிசுகள் கிடைத்திருப்பது குறித்து அறிவிக்க புதிய முறையை மெட்ரோ நிர்வாகம் பின்பற்றியிருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு, மக்களுக்கு பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது குறைந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் தொடர்ந்து மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு ரூ.2,000 மதிப்பிலான பரிசுப் பொருள்களை வழங்கும் திட்டத்தை மெட்ரோ நிர்வாகம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?
அதன்படி, அதிகமுறை மெட்ரோ ரயிலில் பயணித்து பரிசு பெற்ற பயணிகளுக்கு அந்தந்த தகவலை தெரிவிப்பது எப்படி என யோசித்திருக்கிறார்கள். புதிய முறையில் அதனை செயல்படுத்தியும் இருக்கிறார்கள்.
காலையில் பரபரப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பயணிகள் சிலருடைய ஸ்மார்ட் அட்டைகள் இயங்காமல் போய்விட்டது. அவர்கள் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியதும், அங்கு அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.
அங்கிருக்கும் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, உங்களுக்கு ரூ.2,000 மதிப்பிலான பரிசு கிடைத்திருப்பதாக அறிவிக்கிறார்.
மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பது மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது முதல் தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் 400 பயணிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ரூ.2,000 மதிப்பிலான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரயில் பயணிகளின் விவரங்கள் எதுவும் மெட்ரோ நிர்வாகத்திடம் இல்லை என்பதால், வேறு வழி இல்லாமல் அவர்களது ஸ்மார்ட் கார்டு முடக்கப்படுகிறது. அது பற்றி அவர்கள் புகார் கொடுக்க வரும் போதுஅவர்களுக்கு பரிசு கிடைத்திருப்பது குறித்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஒரு மாதத்தில் அதிக முறை மெட்ரோ ரயிலில் பயணம், ஸ்மார்ட் காடில் அதிக முறை ரீசார்ஜ் செய்திருப்பது உள்ளிட்டவை பரிசு பெறுவதற்கான அடிப்படையாக உள்ளது.
ஒரு மாதத்தில் அதிகபட்சம் ஒருவர் 104 முறை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார். முதலில் மாதத்துக்கு 30 பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஸ்பான்சர்கள் கிடைக்காததால், ஒரு மாதத்துக்கு 10 பேர் என்ற விகிதத்தில் தேர்வு செய்திருக்கிறோம் என்கிறார்கள் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள்.