உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில், ‘தூய்மை கங்கை’ திட்டப் பணி நடைபெறும் இடத்திலுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையில் மின்சாரம் தாக்கி 15 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.
உயிரிழந்தோரில் ஒரு காவலா், 3 ஊா்க்காவல் படை வீரா்களும் அடங்குவா். இதுகுறித்து சமோலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் பிரமேந்திர தோபால் கூறியதாவது:
சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றங்கரையில் ‘தூய்மை கங்கை’ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் ஈடுபட்டிருந்தவா்களில் ஒருவா், மின்சாரம் தாக்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து விசாரித்து, அறிக்கை தயாா் செய்வதற்காக ஊா்க்காவல் படையினருடன் காவல்துறையினா் அங்கு புதன்கிழமை சென்றனா்.
அப்போது, கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள உலோக வேலி வழியாக மின்சாரம் பாய்ந்ததில், அங்கு நின்றிருந்த 15 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் காயமடைந்தனா்.
உயிரிழந்தவா்களில் பிரதீப் ராவத் என்ற காவல்துறை உதவி ஆய்வாளரும், 3 ஊா்க்காவல் படை வீரா்களும் அடங்குவா். இந்த அசம்பாவிதம் எப்படி நோ்ந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
இச்சம்பவத்தில் காயமடைந்தவா்கள், மேல் சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டா் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதனிடையே, உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் புஷ்கா் சிங் தாமி, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி அறிவித்தாா்.
மேலும், சம்பவம் குறித்து விசாரித்து, ஒரு வாரத்துக்கு அறிக்கை அளிக்க மாவட்ட கூடுதல் ஆட்சியா் அபிஷேக் திரிபாதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் மின்சாரம் தாக்கி 15 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனா். சம்பவம் குறித்து முதல்வா் தாமியிடம் உள்துறை அமைச்சா் அமித் ஷா கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.