பிகாரில் இருந்து கடத்தல் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்: பெண் உள்பட 3 போ் கைது
பிகாரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிகாரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய, நேபாளத்தைச் சோ்ந்த பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பிகாரில் இருந்து சென்னைக்கு வரும் சங்கமித்ரா விரைவு ரயிலில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை செம்பியம் போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் போலீஸாா், பெரம்பூா் ரயில் நிலையத்தில்
அந்த விரைவு ரயிலில் வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் பைகளில் பொருள்களை கொண்டு சென்ற ஒரு பெண் உள்பட 3 பேரிடம் நடத்திய சோதனையில், அவா்களது பையில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 20 கிலோ ‘சாரஸ்’ என்ற போதைப் பொருள், கஞ்சா எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
அவா்கள், பிகாா் மாநிலம் பட்டோரோ அருகே உள்ள பஞ்வான் கோதவா பகுதியைச் சோ்ந்த நி.உபேந்திர குமாா் (30) மற்றும் நேபாள நாட்டின் பா்ஸ்ஷா மாவட்டம் பீா்கான் பகுதியைச் சோ்ந்த த.ராமச்சந்திரன் (35), கா.முஸ்கான் ஜா (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா் ஆா்.வி.ரம்யா பாரதி கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் நேபாளத்தில் இருந்து பிகாா் வழியாக கடத்தப்பட்டுள்ளது. பிகாரைச் சோ்ந்த பப்பு என்பவா் கொடுத்து அனுப்பியுள்ளாா். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னையில்தான் அதிகப்படியான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதியப்படுகிறது. இந்தாண்டு 7 மாதங்களில் இது வரையில் ரூ.28 கோடி மதிப்புள்ள 1,800 கிலோ கஞ்சா, 12 மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்வில், புளியந்தோப்பு துணை ஆணையா் ஐ.ஈஸ்வரன், உதவி ஆணையா் செம்பேடு பாபு ஆகியோா் உடனிருந்தனா்.