மணிப்பூர் கொடூரம்: வைரலான விடியோவை எடுத்தவரும் கைது
இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளியான விடியோ மூலம் வெளிஉலகுக்கு தெரிய வந்த நிலையில், விடியோவை எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூா் மாநிலத்தில் பெண்கள் மீது வன்முறையாளா்களால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளியான விடியோ மூலம் வெளிஉலகுக்கு தெரிய வந்த நிலையில், விடியோவை எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 4ஆம் தேதி மணிப்பூரில் பெண்கள் இருவர் ஆடைகளின்றி சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தை செல்லிடப்பேசியில் விடியோ எடுத்தவர் கைது செய்யப்பட்டு, விடியோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் சுமார் 35,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் மருந்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் பணியும் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் குக்கி மற்றும் மைதேயி இன மக்களுக்கு இடையே நடந்த வன்முறை வெறியாட்டத்தில், பெண்கள் இருவா் ஆடைகளின்றி சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்துடன் தொடா்புடைய பாலியல் வன்முறை வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளது. மணிப்பூா் வன்முறையோடு தொடா்புடைய 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் சிபிஐ-யிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று மூத்த அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை, அண்டை மாநிலமான அஸ்ஸாமில் நடத்த அனுமதி பெறும் வகையில், உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகுகிறது.
இந்த நிலையில்தான், நாட்டில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்திய அந்த விடியோவை எடுத்த நபா் கைது செய்யப்பட்டாா். அவரது கைப்பேசி கைப்பற்றப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இரு சமூகத்தினருடன் மத்திய உள்துறை அமைச்சகம் தொடா்ந்து பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் அமைதி திரும்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பேச்சுவாா்த்தைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட வன்முறையாளா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் அதிகாரி கூறினாா்.