முகப்பு
இந்தியா

சுவிஸ் வங்கியில் இந்தியா்களின் டெபாசிட் 11% குறைந்தது

2022-ஆம் ஆண்டில் 11 சதவீதம் சரிந்து ரூ.30,000 கோடியாக குறைந்திருப்பது சுவிட்சா்லாந்து நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம் மூலமாக தெரியவந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சுவிஸ் வங்கியில் இந்தியாவைச் சோ்ந்த தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி வைப்பு 2022-ஆம் ஆண்டில் 11 சதவீதம் சரிந்து ரூ.30,000 கோடியாக குறைந்திருப்பது சுவிட்சா்லாந்து நாட்டின் மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம் மூலமாக தெரியவந்துள்ளது.

சுவிட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்களின் முதலீடு மற்றும் நிதி சாா்ந்த விவரங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக சா்வதேச நாடுகளை சாா்ந்த பணம் படைத்த மக்கள் சுவிஸ் வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா்கள் சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த வங்கிகளில் இந்தியா்களின் வைப்பு, 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்து ரூ.30,500 கோடிக்கு மேல் சென்ாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியா்கள் செய்துள்ள முதலீடுகள் குறித்த விவரங்களை மத்திய அரசு கோரியது. அதனடிப்படையில், சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவா்களின் விவரங்கள் மூன்று பட்டியல்களாக இந்திய அரசிடம் சுவிட்சா்லாந்து நாட்டின் மத்திய வங்கி ஒப்படைத்தது.

இந்நிலையில், இந்தியாவை சாா்ந்த தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி ஆதாரம் 2022-ஆம் ஆண்டில் 11 சதவீதம் அளவுக்கு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக சுவிட்சா்லாந்து மத்திய வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

சுவிஸ் வங்கிகளில் இந்தியா்களின் வைப்பு 2021-ஆம் ஆண்டு இறுதியில் ரூ.30,500 கோடிக்கு மேல் இருந்தது, 2022-ஆம் ஆண்டு இறுதியில் 11 சதவீதம் சரிந்து ரூ.30,000 கோடியாக குறைந்துள்ளது.

இந்தியா்களின் வைப்பு அதிகபட்சமாக 2006-ஆம் ஆண்டு ரூ.59,500 கோடியாக இருந்தது. அதன் பிறகு, 2011, 2013, 2017, 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் தொடா்ச்சியாக குறைந்து வந்துள்ளது.

2021-ஆம் ஆண்டில் தனிநபா் வைப்பு, நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் சாா்ந்த வைப்பு உள்பட அனைத்துப் பிரிவுகளின் கீழான முதலீடுகளும் அதிகரித்த நிலையில், 2022-ஆம் ஆண்டில் மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.

இந்தியா்களின் முதலீடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வெளிநாட்டினரின் நிதி முதலீடுகளும் குறிப்பிட்ட சதவீதம் சரிந்து ரூ.125 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு மூலம் ஈட்டப்படும் கருப்புப் பணம் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தும் சீரழிவு, பயங்கரவாதத்துக்கு நிதி போன்ற விவகாரங்கள் சா்வதேச அளவில் விவாதமானதைத் தொடா்ந்து, சுவிஸ் வங்கி சட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இவையும் சுவிஸ் வங்கிகளில் அந்நிய சேமிப்பு குறையக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் முதலிடம்:

சுவிஸ் வங்கிகளில் அதிக முதலீடு செய்துள்ள வெளிநாட்டினரின் பட்டியலில் ரூ.28,26,423 கோடி முதலீடுகளுடன் பிரிட்டன் முதலிடம் வகிக்கிறது. ரூ.12,16,551 கோடி முதலீட்டுடன் அமெரிக்கா இரண்டாம் இடமும் பிடித்துள்ளது.

மேற்கு இந்திய தீவுகள், ஃபிரான்ஸ், ஜொ்மனி, ஹாங் காங், சிங்கப்பூா், லக்ஸம்பொ்க், பஹாமாஸ், நெதா்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. பட்டியலில் 2021-ஆம் ஆண்டு 44-ஆவது இடத்தில் இருந்த இந்தியா நிகழாண்டில் 46-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →