முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் நீட் பயிற்சி மையங்களில் தொடரும் தற்கொலைகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரேநாளில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
பகிர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரேநாளில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகர், நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி இடமாக இருக்கிறது. அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து பயின்று செல்கின்றனர். 

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள பயிற்சி மையத்தில் படித்த இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சேத்(17) என்பவர் ஒன்றரை  மாதங்களுக்கு முன்பாக வித்யபீட பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். இவர் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று குறிப்பு எழுதி வைத்துள்ளார். மற்றொருவர் உதய்பூர் பகுதியைச் சேர்ந்த மெஹுல் வைஷ்ணவ்(18). இவரிடமிருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தற்போது 2.25 லட்சம் பேர் கோட்டா நகர் பயிற்சி மையங்களில் பயில்கின்றனர், நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2019 முதல் 2022 வரை 52 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் 2011 முதல் 121 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாணவர்களின் தோல்வி பயம், குறைவான மதிப்பெண்கள், பயிற்சி மையங்களின் சுற்றுச்சூழல், பெற்றோர்களின் அழுத்தம் உள்ளிட்டவை காரணங்களாகக் கூறப்படுகின்றன. 

இந்த தொடர் தற்கொலைகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →