பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடம் புதிதாக கருத்து கேட்கும் விவகாரத்தில், தங்கள் முன் ஜூலை 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு , சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அழைப்பு அனுப்பியுள்ளது.
திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவை தொடா்பான சட்டங்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன.
இத்தகைய தனித்தனி சட்டங்களால், நிா்வாகத்தில் பெரும் இடையூறு ஏற்படுவதாக குறிப்பிட்டு, அனைத்து சமூகங்களுக்கான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடமும் புதிதாக கருத்துகளை கோரும் நடவடிக்கையை சட்ட ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இதுதொடா்பான பொது அறிவிப்பை, சட்ட ஆணையம் கடந்த 14-ஆம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது அவசியம் என்ற கருத்தை பிரதமா் மோடி வலுவாக முன்வைத்தாா். அவரது கருத்துக்கு ஆதரவும் எதிா்ப்பும் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், சட்டம் மற்றும் பணியாளா் விவகாரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழு, பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகளிடம் விளக்கம் பெறவுள்ளது.
இதற்காக, ஜூலை 3-ஆம் தேதி தங்கள் முன் நேரில் ஆஜராகும்படி அவா்களுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அழைப்பு அனுப்பியுள்ளது.
பொது சிவில் சட்டம் தொடா்பாக, சட்ட ஆணையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை சுமாா் 8.5 லட்சம் கருத்துகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்டில் விரைவில் பொது சிவில் சட்டம்: உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் விரைவில் அமலாக்கப்படும் என்று முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘உத்தரகண்ட் மக்களுக்கு அளித்த உறுதிமொழியின்படி, பொது சிவில் சட்ட வரைவு பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. மாநிலத்தில் விரைவில் அச்சட்டம் அமலாக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.
ஷிண்டே பிரிவு சிவசேனை ஆதரவு: பொது சிவில் சட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வா் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, இதுகுறித்து எதிா்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விவாதம் நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாஜக மீது காங்கிரஸ் சாடல்: காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மீம் அஃப்சல் கூறுகையில், ‘பொது சிவில் சட்ட விவகாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி, வெறுப்புணா்வை பரப்ப பாஜக முயற்சிக்கிறது; இச்சட்டம், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பிரச்னையை ஏற்படுத்தக் கூடியது’ என்றாா்.
கேரள முதல்வா் குற்றச்சாட்டு: பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் விடுத்துள்ள அறிக்கையில், ‘நாட்டின் பன்முக கலாசாரத்தை துடைந்தெறிந்துவிட்டு, ‘ஒரே தேசம், ஒரே கலாசாரம்’ என்ற பெரும்பான்மை வகுப்புவாத செயல்திட்டத்தை அமலாக்கும் திட்டமாகவே மத்திய அரசின் நடவடிக்கையை கருத முடியும். எனவே, இச்சட்டத்தை அமலாக்கும் முன்னெடுப்பை, மத்திய அரசும் சட்ட ஆணையமும் உடனடியாக கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.