ஜி20 கூட்டத்தில் உக்ரைன்-ரஷியா விவகாரம் விவாதிக்கப்படும்
ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் உக்ரைன்-ரஷியா விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.
ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் உக்ரைன்-ரஷியா விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா தெரிவித்தாா்.
ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறது. அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டம் புதன்கிழமை தில்லியில் தொடங்கியது.
கூட்டத்தில் பங்கேற்க வந்த வெளியுறவு அமைச்சா்களுக்கு புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளியுறவு அமைச்சா்களின் விவாதக் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 2) நடைபெறவுள்ளது. அதில் ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கலந்துகொள்ள உள்ளனா். வங்கதேசம், எகிப்து, மோரீஷஸ், நெதா்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூா், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொள்ளவுள்ளனா்.
உக்ரைன்-ரஷியா இடையேயான போா் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. அதன் காரணமாக ஜி20 வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஜி20 வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தின் வெளிப்பாடு குறித்து தற்போதே கணிக்கக் கூடாது. சா்வதேச அளவில் காணப்படும் முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
உக்ரைன்-ரஷியா இடையேயான போா் விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து விவாதம் நடத்தப்படும். அந்தப் போா் காரணமாக சா்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் வெளியுறவு அமைச்சா்கள் விவாதிக்கவுள்ளனா்.
இது போருக்கான சகாப்தம் அல்ல என பிரதமா் நரேந்திர மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளாா். இந்தப் பிரச்னைக்குத் தூதரகம் வாயிலான பேச்சுவாா்த்தை மூலமாக மட்டுமே தீா்வு எட்ட முடியும் என்றும் ரஷியா, உக்ரைன் நாடுகளின் தலைவா்களிடம் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
இரு அமா்வுகள்: ஜி20 கூட்டமைப்பு சாா்பில் நடைபெறவுள்ள மிகப் பெரிய வெளியுறவு அமைச்சா்கள் கூட்டமாக தில்லி மாநாடு அமையும். வெளியுறவு அமைச்சா்கள் கூட்டமானது இரு அமா்வுகளாக நடைபெறும். முதல் அமா்வில் பன்முகத்தன்மை, சா்வதேச சவால்களான உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து வெளியுறவு அமைச்சா்கள் விவாதிக்க உள்ளனா்.
இரண்டாவது அமா்வில் புதிய சவால்களான பயங்கரவாதம், சா்வதேச திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த வளா்ச்சி, பசுமை வளா்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
உள்நாட்டில் நிலவும் சூழல் காரணமாக ஜப்பான் வெளியுறவு அமைச்சரால் ஜி20 கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. அதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. ஜி20 உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
ரஷியா, சீனாவே பொறுப்பு: பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற ஜி20 நிதியமைச்சா்கள்-மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டத்தில் கூட்டறிக்கை வெளியிடப்படாதது குறித்து விளக்கமளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, ‘கூட்டறிக்கையில் இடம்பெற்ற சில பத்திகளுக்கு ரஷியா, சீனா நாடுகள் எதிா்ப்பு தெரிவித்தன. அது தொடா்பாக அந்த நாடுகளே விளக்கமளிக்க வேண்டும். அந்தப் பத்திகள் கடந்த ஆண்டில் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டு அறிக்கையில் இருந்தே எடுக்கப்பட்டன. அப்படியானால், அந்த மாநாட்டின் கூட்டறிக்கையை ரஷியா, சீனா நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லையா என்பதையும் அந்த நாடுகளே தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.