முகப்பு
இந்தியா

வாரணாசி: காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வருக்கு அழைப்பு: மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்

உத்தர பிரதேசம், வாரணாசியில் நடைபெற்ற காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் அழைக்கப்பட்டார்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

உத்தர பிரதேசம், வாரணாசியில் நடைபெற்ற காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் அழைக்கப்பட்டார். அவரிடம் அனைத்து ஆதரவையும் அளிக்கக் கோரி கடிதம் எழுதப்பட்டதாக மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் புதன்கிழமை மாநிலங்களவையில் விளக்கமளித்தார்.
 இதுதொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் புதன்கிழமை எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதிலளித்ததாவது: "காசி - தமிழ் சங்கமம்' தொடர்பாக கடந்த 2022 அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாரபூர்வமாக தமிழக முதல்வருக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி அனைத்து ஆதரவையும் கோரினார்.
 இந்தச் சங்கமம் தொடர்பாக வாரணாசிக்கு வருகை தருவதற்காக அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதிகளாகப் பதிவு செய்ய ஊக்குவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டார்.
 மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புகள் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து 15 தமிழ் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டு விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை உத்தர பிரதேச மாநில அரசு தவிர மத்திய ரயில்வே, கல்வி, உணவு பதப்படுத்தும் தொழில்கள், ஜவுளி, சுற்றுலா போன்ற பல மத்திய அமைச்சகங்களும், சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம், வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற பல நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன. அதன்படி, இந்த சங்கமம் தொடர்பான அனைத்துச் செலவுகளையும் இந்த அமைச்சகங்களும் துறைகளும் ஏற்றுக் கொண்டன என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.