புதுதில்லி: பெரும் முதலீடு இன்றி, மிகச் சிறு தொகை கொண்டு தொடங்கி மாபெரும் வெற்றிகளைக் குவித்த மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்றவை புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களாகத்தான் தங்கள் வரலாற்றைத் தொடங்கின.
இந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி நிலவரப்படி 92,683 நிறுவனங்கள் புத்தாக்க (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புத்தாக்க நிறுவனங்கள் வரி மற்றும் வரி அல்லாத சலுகைகளைப் பெற தகுதியுடையவையாகும்.
நாட்டில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், அரசு ஜனவரி 16, 2016 அன்று ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அரசின் தொடர் முயற்சியால் 2016ல் 442ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 2023ல் 92,683 ஆக உயர்த்துள்ளது என்றார். 7,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவன கட்டுமானம், வீட்டு சேவைகள், தளவாடங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் உள்ளன.
அதிக எண்ணிக்கையிலான 11,099 அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவை. அதைத் தொடர்ந்து சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல் (8,691) நிறுவனங்களும், கல்வி துறையில் (5,962) நிறுவனங்களும், விவசாயத் துறையில் (4,653) நிறுவனங்களும் மற்றும் உணவு மற்றும் பானங்கள் துறையில் (4,523) நிறுவனங்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.