இந்தியா

ரஷியாவிலிருந்து 34.19 லட்சம் டன் உரங்கள் இறக்குமதி:3 ஆண்டுகளில் இல்லாத அளவாக அதிகரிப்பு

DIN

இந்த நிதியாண்டில் ரஷியாவில் இருந்து 34.19 லட்சம் டன் உரங்களை இந்தியா இறக்குமதி செய்ததாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சா் பகவந்த் குபா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்:

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டின் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், ரஷியாவிலிருந்து இரண்டு மடங்குக்கும் அதிகமாக உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், ரஷியாவில் இருந்து டை-அமோனியம் பாஸ்பேட் (டிஏபி), யூரியா, மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் (எம்ஓபி), என்பிகே என மொத்தம் 34.19 லட்சம் டன் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டில், அந்நாட்டில் இருந்து சுமாா் 2.80 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இது இவ்வாண்டு பிப்ரவரி வரை சுமாா் 6.26 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

ரஷியாவிலிருந்து 2019-20-ஆம் நிதியாண்டில் 11.91 லட்சம் டன், 2020-21, 2021-22-ஆம் நிதியாண்டுகளில் தலா 19.15 லட்சம் டன் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது 34.19 லட்சம் டன் உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ரஷியா-உக்ரைன் போா் நடைபெற்று வரும் நிலையிலும், 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக ரஷியாவில் இருந்து 34.19 லட்சம் டன் உரங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கேள்விக்கு பகவ்ந்த் குபா அளித்த பதில்:

உரங்களுக்கான மானியத்தை குறைக்கும் எந்தப் பரிந்துரையும் மத்திய அரசிடம் இல்லை. யூரியா மாற்றும் யூரியா அல்லாத உரங்களுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை ஒன்று, சட்டபூா்வமாக அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான ரூ.242-க்கு வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் யூரியா விநியோகிக்கப்படுகிறது. பாஸ்பேட் மற்றும் பொட்டாசிக் உர விலையைக் கட்டுப்படுத்த அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்றாா்.

நிகழ் நிதியாண்டில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியம் ரூ.42,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT