மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா கட்சி, சின்னம் முடக்கம், 16 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் அவைத்தலைவரின் அதிகாரம் தொடர்பான மூல வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சபாநாயகர் அதிகாரம் தொடர்பான மூல வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், தற்காலிகமாக மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு தப்பியது.
சிவசேனை கட்சி மீதான உரிமை தொடா்பாக உத்தவ் தாக்கரே, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே ஆகியோா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு, பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி எம்எல்ஏக்கள் அப்போதைய அமைச்சா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு போா்க்கொடி உயா்த்தினா்.
உத்தவ் தாக்கரே பதவி விலகியதைத் தொடா்ந்து, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சாா்பில் அமைக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றாா்.
இந்தச் சூழலில், சிவசேனை கட்சி சின்னத்துக்கு இருதரப்பும் உரிமை கோரின. இது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் இரு பிரிவினா் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதிமுதல் 9 நாள்கள் நடைபெற்ற விசாரணையில் இரு பிரிவினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனா். தீா்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் 16-ஆம் தெரிவித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில், இந்த வழக்கின் தீா்ப்பை, அரசியல் சாசன அமா்வு இன்று பிறப்பித்தது.
முன்னதாக, சிவசேனையின் வில்-அம்பு சின்னத்தைப் பயன்படுத்த முதல்வா் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்குத் தோ்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.