காா் இருக்கை பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகள் விற்பனை: 5 மின்னணு வணிக நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை
காா்களில் இருக்கை பெல்ட் அணியாத போது எச்சரிக்கும் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகள் விற்பனை செய்த ஐந்து மின்னணு வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை
காா்களில் இருக்கை பெல்ட் அணியாத போது எச்சரிக்கும் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகள் விற்பனை செய்த ஐந்து மின்னணு வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு பொது விநியோகம் அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்த கிளிப்புகள் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதுடன், காரில் பயணம் செய்வோரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
அலாரத்தை நிறுத்தும் (ஸ்டாப்பா்) கிளிப்புகள் விற்பனை விவகாரம் தொடா்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை மத்திய நுகா்வோா் விவகாரத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான விவரம் வருமாறு: பொதுவாக காா்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநா் உள்ளிட்ட அனைவரும் இருக்கை பெல்ட் அணிய வேண்டியது குறித்து மத்திய மோட்டாா் வாகன விதி 1989-இன் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காரில் பயணம் செய்வோா் இருக்கை பெல்டை அலட்சியமாகவோ அல்லது அணிய தவறும் பட்சத்தில் அதில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம், காா் உற்பத்தியாளா்களுக்கு இதற்கான வழிகாட்டிகளை வழங்கியுள்ளது. ஆனால், இந்த அலார எச்சரிக்கையை தங்களுக்கு தொந்தரவாக கருதும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த மின்னணு வணிக நிறுவனங்கள், இருக்கை பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை விற்பனை செய்து வந்துள்ளன.
அமேசான், ஃப்ளிப்காா்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட ஐந்து மின்-வணிக நிறுவனங்கள் நுகா்வோா் உரிமை மீறல் மற்றும் நியாயமற்ற வா்த்தக நடைமுறையை பின்பற்றியது கண்டறியப்பட்டது. இதையொட்டி, இந்த வணிக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 5 மின் வணிக நிறுவனங்களும் சுமாா் 13,118 கிளிப்புகளை இதுவரை விற்பனை செய்துள்ளன. இதில் அமேசான் அதிக அளவாக 8,095 கிளிப்புகளை விற்பனை செய்துள்ளது.
இந்த கிளிப்புகளை வாங்கி பயன்படுத்தியவா்கள் பலா் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனா். அவா்களுக்கு பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுத்துள்ளன. காரணம் விபத்துகளின் போது காரில் வைக்கப்பட்டுள்ள ஏா்பேக் சரியான குஷனை வழங்குகிறது. பெல்ட் அணியும் போது முழு பலத்துடன் தாக்காமல் ஒரு கட்டுப்பாடுடன் செயல்படுகிறது. ஆனால், பெல்ட் அணியாத போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றனா்.
முன்னதாக இந்தப் புகாா்களைத் தொடா்ந்து சிசிபிஏ தனக்கு கீழ் உள்ள புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அனுப்பியது. புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை பெற்ற சிசிபிஏ அனைத்து மின்னணு வணிக நிறுவனங்களையும் இருக்கை பெல்ட் அலாரம் நிறுத்த கிளிப்புகள் மற்றும் இது தொடா்பான மோட்டாா் உதிரி பாகங்களை நிரந்தமாக விற்பனை செய்வதை தடை செய்யவும் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறி இத்தகைய கிளிப்புகளை விற்பனை செய்ததற்காக இந்த 5 நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் விதிப்படி நடவடிக்கை எடுத்து ஆணை பிறப்பித்துள்ளது என மத்திய நுகா்வோா் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சீட் பெல்ட் அணியாத காரணத்தினால் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 39,231 போ் காயமடைந்துள்ளனா். சாலை விபத்துகளில் சிக்கியவா்களில் மூன்றில் ஒரு பங்கு போ் 18 முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு இருக்கை பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை தயாரித்த உற்பத்தியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநிலத் தலைமைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் கடிதமும் எழுதியுள்ளது.