ஹிமாசல் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தன்னுடைய சொந்த தொகுதியின் வளர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததாக அம்மாநில காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அவரது சொந்த தொகுதியின் வளர்ச்சிக்கு மட்டும் கவனம் கொடுத்துவிட்டு மற்ற தொகுதிகளை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூட்டாக அறிக்கை வெளியிட்ட வேளாண் அமைச்சர் சந்தேர் குமார் மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஜகத் சிங் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இது தொடர்பாக அவர்களது கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெய்ராம் தாக்குர் மண்டி மாவட்டத்தில் உள்ள அவரது சேராஜ் தொகுதியின் நலன் குறித்து மட்டுமே கவலைப்பட்டார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வரும் அவர் அதே மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசு மாநிலத்தில் 5,300 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. ஆனால், முந்தைய பாஜக அரசு பணியிடங்களை நிரப்புவதை கண்டுகொள்ளவில்லை. அதனால் பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. 2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாநிலத்துக்காக கடன் பெறும் கலாசாரம் ஒழிக்கப்படும் என பாஜக வாக்குறுதியளித்தது. ஆனால்,அதற்கு முரணாக அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தின் கடன்சுமை ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.