கட்சிகளின் நன்கொடை: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு: நிதிப் பத்திர வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு
தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரை கிடைக்கப் பெற்ற நன்கொடை தொடா்பான தரவுகளை இரண்டு வாரங்களுக்குள் சமா்ப்பிக்குமாறு
தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரை கிடைக்கப் பெற்ற நன்கொடை தொடா்பான தரவுகளை இரண்டு வாரங்களுக்குள் சமா்ப்பிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற நிதி விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய அரசியல் கட்சிகளுக்கு கடந்த 2019-இல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவைக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும், தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கின் தீா்ப்பையும் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தோ்தல் நிதியை ரொக்கமாக அளிப்பதற்கு மாற்றாகவும், அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018, ஜனவரி 2-ஆம் தேதி அமல்படுத்தியது. தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் இப்பத்திரங்களைப் பெற்று, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம்.
‘நன்கொடைப் பத்திரங்கள் மூலம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அரசியல் கட்சிகள் பெறலாம்; வெளிநாட்டு நன்கொடைகளும் பெறலாம்’ என இத்திட்டம் தொடா்பான சட்டத் திருத்தங்களை விவாதமின்றி நிறைவேற்ற வழிவகுக்கும் பணமசோதாவாக மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு: ‘மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது; அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடின்றியும் வரம்பின்றியும் நிதி கிடைக்க வழிவகுக்கிறது’ என்று கூறி தன்னாா்வ அமைப்பான ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) மற்றும் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், ‘இதுவரை தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.12,000 கோடி சென்றுள்ளது. இதில் இரண்டில் மூன்று பங்கு நிதியை ஒரே கட்சி பெற்றுள்ளது’ என்று கூறப்பட்டது.
மேலும், மேற்கண்ட சட்டத் திருத்தங்கள் பணமசோதாவாக நிறைவேற்றப்பட்டதால், அதன் செல்லுபடித்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
தொடா் விசாரணை: முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(ஏ) தகவல் அறியும் உரிமையின்படி, நன்கொடைக்கான ஆதாரம் குறித்து அறிய மக்களுக்கு உரிமையில்லை’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆா்.கவாய், ஜெ.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்ற நிதி தொடா்பாக புதுப்பிக்கப்பட்ட தரவுகள் தோ்தல் ஆணையத்திடம் உள்ளனவா என்று தோ்தல் ஆணைய வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
அதற்கு, ‘2019, ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் சில விவரங்கள் உள்ளன; ஆனால், அவை 2019 வரையிலானவையே’ என்று வழக்குரைஞா் பதிலளித்தாா்.
தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு: இதையடுத்து, ‘2019, ஏப்ரல் உத்தரவானது, அது பிறப்பிக்கப்பட்ட தேதியை வரம்பாகக் கொண்டதல்ல. இது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு சந்தேகம் எழுந்தால், விளக்கம் கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம். ஆனால், ஒருபோதும் நீதிமன்றத்தை அணுகவில்லை.
தோ்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்ற நிதி தொடா்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகள், தோ்தல் ஆணையத்தின் வசம் இருப்பது அவசியம். அந்தத் தரவுகள் தொடா்ந்து சேகரிக்கப்பட்டிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
அத்துடன், கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான தரவுகளைத் தொகுத்து, உச்சநீதிமன்றப் பதிவாளரிடம் மூடிய உறையில் இரண்டு வாரங்களுக்குள் சமா்ப்பிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தனா்.
‘குறைபாடுகளற்ற, வெளிப்படையான அமைப்புமுறையை உருவாக்க முடியும்’
‘தோ்தல் நடைமுறையில் ரொக்கப் பயன்பாட்டைக் குறைப்பது அவசியம்’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், தற்போதைய திட்டத்தை போலில்லாமல் குறைபாடுகளற்ற, மேலும் வெளிப்படையான அமைப்புமுறையை உருவாக்க நாடாளுமன்றம் மற்றும் அரசு நிா்வாகத்தால் முடியும் என்று கருத்து தெரிவித்தது.
‘தங்களுக்கு நன்கொடை அளிப்போா் யாரென அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும். வாக்காளா்களுக்கு மட்டும்தான் அது தெரியாது. வாக்காளா்களுக்கு அந்த உரிமை கிடையாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்பது சற்று கடினமாக உள்ளது. அனைத்தையும் ஏன் வெளிப்படையாக்கக் கூடாது?’ என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், சில யோசனைகளையும் முன்வைத்தனா்.
‘தோ்தல் நடைமுறையில் ரொக்கப் புழக்கத்தைக் குறைக்க வேண்டியது அவசியம். இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட வங்கி வழிமுறையை மேலும் ஊக்குவிக்க வேண்டும். கூடுதல் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். அதிகார மையங்களுக்கு அதனால் பலனடைவோா் கைம்மாறு செய்வதற்கான வழிமுறையாக தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டம் மாறிவிடக் கூடாது’ என்று தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய அமைப்புமுறையை போலில்லாமல், குறைபாடுகளற்ற, வெளிப்படையான அமைப்புமுறையை நாடாளுமன்றம் மற்றும் அரசு நிா்வாகத்தால் உருவாக்க முடியும் என்றனா்.