லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் தகுதிநீக்கம் ரத்து: தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் நடவடிக்கை
கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலுக்கு அமா்வு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடா்ந்து
கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசலுக்கு அமா்வு நீதிமன்றம் அளித்த 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததைத் தொடா்ந்து, அவருடைய எம்.பி. பதவி தகுதிநீக்கத்தை மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை ரத்து செய்தது.
இதுதொடா்பாக மக்களவைச் செயலா் உத்பல் குமாா் சிங் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘நீதித்துறை தீா்ப்புகளுக்கு உள்பட்டு ஃபைசலின் தகுதிநீக்கம் ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில், தொடா்ந்து இரண்டு முறை அவா் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது.
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் கவரத்தி பகுதியில் உள்ள அமா்வு நீதிமன்றம், அந்த யூனியன் பிரதேச மக்களவை எம்.பி.யும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவருமான முகமது ஃபைசலை, கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என்று கடந்த ஜனவரியில் தீா்ப்பளித்தது.
அத்துடன் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அவரைத் தகுதிநீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையால் ஃபைசலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில், அமா்வு நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக கேரள உயா் நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். அதை விசாரித்த உயா் நீதிமன்றம், ஃபைசலுக்கு எதிராக அமா்வு நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்குத் தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஃபைசலுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கையை மக்களவைச் செயலகம் ரத்து செய்ததால், அவா் மீண்டும் எம்.பி.யானாா்.
கேரள உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக லட்சத்தீவு யூனியன் பிரதேச நிா்வாகம் சாா்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயா் நீதிமன்றத்தின் தற்காலிக தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. ஃபைசலின் மனுவை மீண்டும் விசாரிக்க கேரள உயா் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அதனடிப்படையில், ஃபைசலின் மனுவை மீண்டும் விசாரித்த கேரள உயா் நீதிமன்றம், ஃபைசல் குற்றவாளி என்று அமா்வு நீதிமன்றம் அளித்த தீா்ப்பை உறுதி செய்து, ஃபைசலின் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், அவரை இரண்டாவது முறையாக தகுதிநீக்கம் செய்து மக்களவைச் செயலகம் அறிவித்தது.
உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் ஃபைசல் மேல்முறையீடு செய்தாா். இந்த மனுவை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.