இந்தியா

என்ன வகையான நீதிமுறை இது?: கத்தார் அரசுக்கு மணீஷ் திவாரி கேள்வி

DIN

8 முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து என்ன வகையான நீதி முறைமை இது என்று காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “நள்ளிரவில் அவர்களை கைது செய்ததே சட்டவிரோதம். 12 மாத தொடர் சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளதும் சட்டத்திற்கு புறம்பானது. கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பொதுவில் முன்வைக்கவில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். தீர்ப்பை பார்ப்பதற்கே அவர்களின் குடும்பத்தினர் கத்தார் தலைநகர் டோஹாவுக்கு வந்து தீர்ப்பு விவரங்களை வெளியில் கூறமாட்டோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின்பே பார்க்க முடியும் என்று அந்நாட்டு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

என்ன வகையான நீதிமுறைமை இது? கத்தாரில் முறையான நீதி விசாரணை நடந்திருக்கும் என்பதை நம்பவே முடியவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரையும் இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வருவதற்கு உடனடியாக உயர்மட்ட அரசியல் தலையீடு தேவை” என்று மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

கத்தாரின் டோஹாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேரும் அந்நாட்டை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 8 பேரையும் மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

சென்னையில் திடீர் மழை!

கோவையில் விமான நிலையத்தில் ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

SCROLL FOR NEXT