‘இதயம் மிகவும் கனமாக உள்ளது’: அரவிந்த் கேஜரிவால்
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன நாளில் தொண்டர்களிடம் பேசிய அரவிந்த் கேஜரிவால் இதயம் மிகவும் கனமாக உள்ளதாக உருக்கமாகப் பேசினார்.
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன நாளில் அக்கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தொண்டர்களிடையே பேசினார்.
கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது, “இந்திய வரலாற்றிலேயே ஆம் ஆத்மி கட்சி அளவுக்கு குறிவைக்கப்பட்ட வேறு கட்சி கிடையாது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ஆம் ஆத்மி கட்சியின் மீது 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள அத்தனை விசாரணை அமைப்புகளும் ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்துள்ளன. ஆனால் அவர்களால் இன்றுவரை ஒரு ஆதாரத்தைக் கூட திரட்ட முடியவில்லை. இதுவே ஆம் ஆத்மி கட்சியினரின் நேர்மைக்கு சான்றாகும்.
Advertisement
Advertisement
2012 ஆம் ஆண்டு இதே நாளில் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினோம். இன்று வரை ஏராளமான ஏற்ற, இறக்கங்களை பார்த்துவிட்டோம். மிகக் கடினமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம். ஆனால் ஒருபோதும் நாம் சோர்வடைந்து விடவில்லை.
எனது இதயம் மிகவும் கனமாக உள்ளது. மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், சஞ்சய் சிங் மற்றும் விஜய் நாயர் ஆகியோர் இல்லாமல் கொண்டாடப்படும் முதல் நிறுவன நாள் இதுவாகும். அவர்கள் பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ராணுவ வீரர்கள் மரணத்தின்போது, பிரதமர் தேஜஸ் விமானத்தில் சவாரி செய்து கொண்டிருக்கிறார்: ஒவைசி விமர்சனம்
மற்ற கட்சியினர் மீது பொய் வழக்கு போட்டு வளைப்பதற்கு பாஜகவுக்கு தெரியும். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினரை அவர்களால் வளைக்க முடியவில்லை. இதுவரை ஆம் ஆத்மி கட்சியின் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் உடைந்து போகவோ அல்லது பாஜகவிடம் விலைபோகவோ இல்லை என்பது நமக்குப் பெருமையான விஷயம்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “சாதாரணமாக தொடங்கப்பட்ட கட்சி இன்று தேசியக் கட்சியாக வளர்ந்துள்ளது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.” என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.