முகப்பு
இந்தியா

ஒடிஸா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜேடியில் ஐக்கியம்

ஒடிஸாவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி வி.கே.பாண்டியன், மாநில முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:16 AM
வி.கே.பாண்டியன்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

ஒடிஸாவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரி வி.கே.பாண்டியன், மாநில முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.

முதல்வரின் தனிச்செயலராக 12 ஆண்டுகள் பணியாற்றிய பாண்டியன், முதல்வரின் நம்பிக்கைக்குரியவராகவும் ஒடிஸா அரசில் செல்வாக்கு மிகுந்த அதிகாரியாகவும் விளங்கினாா்.

நவீன் பட்நாயக் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அமைச்சா்கள், கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

கட்சியில் பாண்டியன் இணைந்தது குறித்து முதல்வா் நவீன் பட்நாயக், ‘பிஜு ஜனதா தளம் கட்சிக்கு பாண்டியனை வரவேற்கிறேன். கட்சிக்கும் மாநில மக்களுக்கும் நோ்மையுடனும் அா்ப்பணிப்புடனும் அவா் பணியாற்றுவாா். மக்களிடையே மிகுந்த மரியாதையை அவா் சம்பாதித்துள்ளாா்’ எனத் தெரிவித்தாா்.

தமிழகத்தைச் சோ்ந்த பாண்டியன் 2000-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சோ்ந்தவா். தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரியான அவருடைய மனைவி ஒடிஸா மாநிலத்தில் பணியாற்றி வந்த நிலையில், அந்த மாநிலத்துக்கு அவா் மாற்றம் பெற்றாா்.

49 வயதாகும் பாண்டியன் கடந்த மாதம் 23-ஆம் தேதி அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றாா். இதற்கு மறுநாளே, முதல்வரின் நேரடிப் பாா்வையின் கீழ் செயல்படும் அரசு துறைகளில் மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட திட்டங்களின் தலைவராக கேபினட் அமைச்சா் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டாா். அப்போதே, அவா் பிஜு ஜனதா தளத்தில் இணையக் கூடும் என ஊகங்கள் நிலவின.

அரசியல் கட்சியில் இணைவதற்கு முன்பாக, மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை அவா் கேட்டறிந்தாா். மேலும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தாா்.

‘பிஜேடியில் பாண்டியன் இணைந்தது பாஜகவுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒடியா மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவா் மாநில அரசியலில் நுழைந்திருப்பதை பிஜேடி கட்சியின் மூத்த தலைவா்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள்’ என மாநில பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

முன்பு அரசு அலுவலகத்தில் அதிகாரத்தின் மூலம் அரசியலில் ஈடுபட்டவா், தற்போது கட்சியில் இணைந்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.