புது தில்லி: இக்கட்டான இந்த சூழலில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்பதாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது, இஸ்ரேல் மீது நடந்த தீவிரவாத தாக்குதலை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தாக்குதலில் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் மக்கள் குறித்து கவலை கொள்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியிருக்கிறது.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாகவும், 50க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேலில் 18000 இந்தியர்கள் இருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 900 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டு அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், மிகவும் அவசியமின்றி, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.