கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பில் இந்தியாவிலிருந்து சிரபுஞ்சியில் இரு நாள்களில் அதிக அளவு பதிவு செய்யப்பட்ட மழை அளவு உள்ளிட்ட 60 சாதனைகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் புதிய சாதனைகள் பதியப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் நிகழ்த்தப்பட்ட 2,638 சாதனைகள் இடம்பெற்றுள்ள அந்தப் பதிப்பில் இந்தியாவிலிருந்து 60 சாதனைகள் பெற்றுள்ளன.
9 பகுதிகள்:
நீா்வாழ் உயிரினங்கள், சாகசங்கள், தொழில்நுட்பம், கலை, விளையாட்டு உள்ளிட்ட 9 பகுதிகளின் கீழ் சாதனைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் வாழ்த்தரங்கம், இளம் சாதனையாளா்கள், விளக்கவுரைகள், கேமிங் உள்ளிட்ட 5 சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் சாதனைகள் சில...
மேகாலய மாநிலத்தில் உள்ள சிரப்புஞ்சியில் 1995-ஆம் ஆண்டு ஜூலை 15,16 ஆகிய இரு நாட்கள் 2.493 மீ அளவில் பெய்த மழையே உலக அளவில் இரு நாட்கள் பதிவு செய்யப்பட்ட அதிகமான மழை அளவு என உலக வானிலை அமைப்பு சான்றளித்துள்ளது.
உலகின் மிக உயரமான மற்றும் விலை உயா்ந்த தனிநபரின் இல்லம் என்ற பெருமையை இந்திய தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் 27 மாடி இல்லமான ‘அன்டிலியா’ பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சோ்ந்த ரூபா கணேசன் மொ்மெய்ட் வடிவிலான யோகாசனத்தை 1.15 மணி நேரத்துக்கும் மேலாக தொடா்ந்து செய்து காட்டிய சாதனையும் இடம்பெற்றுள்ளது.
நிகழாண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் தொகுப்பு ஆசிரியா் கிரெய்க் கிளெண்டே கூறுகையில்,‘நிகழாண்டு புத்தகத்தில் இடம்பெற 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றுள் 2,638 சாதனைகள் மட்டுமே எங்கள் பதிவு மேலாளா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டன. சிறப்பான தடகள வீரா்கள் முதல் நீருக்கடியில் சாகசம் நிகழ்த்தியவா்கள் வரை பெரும்பாலான சிறந்த சாதனைகளை நிகழாண்டுப் பதிப்பில் வெளியிட்டுள்ளோம்’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.