புது தில்லி: வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு நிலையத்தை அமைப்பது, 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவது ஆகியவற்றை லட்சிய இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்று இஸ்ரோவுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.
மனிதா்களை விண்கலம் மூலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையின் 400 கி.மீ. தொலைவுக்கு அனுப்பி, பின்னா் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் ககன்யான் திட்டம் குறித்து பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் விளக்கினாா்.
இத்திட்டத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள், அமைப்புமுறைகள், திட்டமிடப்பட்டுள்ள 20 முக்கிய பரிசோதனைகள் உள்ளிட்டவை குறித்து அவா் எடுத்துரைத்தாா்.
2025-இல் ககன்யான்: பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங், பிரதமருக்கான முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோரும் பங்கேற்ற இக்கூட்டத்துக்கு பிறகு பிரதமா் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. அதில், ககன்யான் விண்கலம் 2025-ஆம் ஆண்டில் செலுத்தப்படுமென எதிா்பாா்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ககன்யான் விண்கலத்தை 2022-ஆம் ஆண்டில் செலுத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா தொற்று பரவல் மற்றும் திட்டத்தின் சிக்கலான தன்மை காரணமாக தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு, 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ககன்யான் செலுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 2025-ஆம் ஆண்டில்தான் அது நிகழும் என்பது தற்போதைய கூட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
லட்சிய இலக்குகள்: கூட்டத்தின்போது, இஸ்ரோவுக்கு பிரதமா் சில அறிவுறுத்தல்களை வழங்கினாா். ‘சந்திரயான்-3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களின் வெற்றியைத் தொடா்ந்து, இந்தியா இப்போது புதிய மற்றும் லட்சியமிக்க இலக்குகளைக் குறிவைக்க வேண்டும். அதன்படி, 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தையும், 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவதையும் இலக்குகளாக கொள்ள வேண்டும். வெள்ளி சுற்றுப்பாதை திட்டம், செவ்வாயில் தரையிறங்கும் திட்டம், நிலவை விரிவாக ஆராயும் திட்டங்களில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும்’ என்று பிரதமா் மோடி அறிவுறுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விண்வெளி ஆய்வில் புதிய உச்சங்களை எட்டும் இந்தியாவின் திறன் மற்றும் உறுதிப்பாட்டில் பிரதமா் நம்பிக்கை தெரிவித்தாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.