'என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்' - 5 மாநிலத் தேர்தல் குறித்து ராகுல் காந்தி!
தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இரு நாள் பயணமாக மிசோரம் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்துப் பேசினார். மேலும் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார்.
மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறப் போகிறது.
இதையும் படிக்க | கார்கே அல்லது ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்: சசி தரூர்
காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்காகப் பாடுபடுகிறது. ராஜஸ்தான் சிறந்த சுகாதாரக் கொள்கையைக் கொண்டுள்ளது, கர்நாடகம் ஒப்பிடமுடியாத சமூகப் பாதுகாப்பை கொடுக்கிறது, சத்தீஸ்கர் வலுவான கொள்கைகளுடன் தொழில்முனைவோரை ஆதரிக்கிறது. மத்திய பிரதேசத்தில் ஊழல் நிறைந்த பாஜக அரசை அகற்றுவோம், தெலங்கானாவில் மகத்தான வெற்றியை எங்களுடைய 6 தேர்தல் வாக்குறுதிகள் உறுதி செய்யும்.
மிசோரம் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு காங்கிரஸிடம் தெளிவான திட்டம் உள்ளது. முதியோருக்கு மாதம் ரூ. 2,500 ஓய்வூதியம், ரூ. 750-க்கு எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் டாங் புய்ஹ்னா பொருளாதார மேம்பாட்டு முயற்சி உள்ளிட்டவை அதில் அடங்கும்.
பாஜக போல் அல்லாமல், அனைத்து இந்தியர்களுக்குமான ஒரு தொலைநோக்குப் பார்வையை காங்கிரஸ் கொண்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடமும் பேசிய ராகுல் காந்தி, மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், பிரதமர் மோடி ஏன் இன்னும் மணிப்பூர் செல்லவில்லை?' என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் வாரிசு அரசியல் குறித்து பேசிய ராகுல், அமித் ஷா, ராஜ்நாத் சிங்கின் மகன்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அனுராக் தாகூர் ஏன் முக்கியத்துவம் பெற்றார். பாஜகவில் பல வாரிசுகள் அரசியலில் பதவியில் இருக்கின்றனர்' என்று கேள்வி எழுப்பினார்.